முகப்பு
தமிழ்நாடு

ஏமாற்றம் அளிக்கிறது- கருணாநிதி; வளர்ச்சிக்கு உதவாது- விஜயகாந்த்

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக

Updated On : 22 மார்ச் 2013, 3:14 am IST
பகிர்:

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி: விவசாயிகளுக்கு இந்தப் பட்ஜெட்டிலாவது முழுமையான நிவாரணம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு வரிகூட பட்ஜெட்டில் இல்லை. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகின்றனர். அது பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை. 18 மணி நேரம் வரை மின்வெட்டு பிரச்னை உள்ளது. சிறு, குறு தொழில்கள் எல்லாம் நலிவடைந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். அவர்களுக்கான நிவாரணம் தொடர்பான அறிவிப்பும் இல்லை. ஒட்டுமொத்தமாக தமிழத்தின் அனைத்துப் பிரிவினரையும் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது பட்ஜெட்.

Advertisement

Advertisement

விஜயகாந்த்: தமிழகம் முழுவதும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணத்துக்கான திட்டத்தைத் தீட்டி இந்திய அரசின் நிதியுதவியைப் பெறுவதற்கான திட்டம் பட்ஜெட்டில் இல்லை. அரிசி கிலோ ரூ.20 என்ற விலையில் ஒரு லட்சம் டன் அரிசியை விற்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது.  இது யானை பசிக்குச் சோளப்பொறி என்ற கதைதான்.  இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கான பெரிய திட்டம் எதுவும் இல்லை.

வரி போடவில்லை என்பதும், இலவசத் திட்டங்களை அறிவிப்பதும் மட்டுமே ஒரு நாட்டை முன்னுக்குக் கொண்டு வராது. கவர்ச்சி திட்டங்கள் வாக்குகள் பெற வேண்டுமானால் உதவலாம். வளர்ச்சிக்கு உதவாது. மக்களின் வாழ்க்கை சுமையைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை.

வைகோ: புதிய வரி விதிப்புகள் இல்லாததும், நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்காததும், உணவு மானியத்துக்கான ஒதுக்கீட்டை ரூ.4,900 கோடி என உயர்த்தியிருப்பதும் வரவேற்கத்தக்கது.

ஆனால் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறவில்லை. இலவசத் திட்டங்களுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மின்சார உற்பத்திக்கான புதிய திட்டங்கள், சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான வரி ரத்து போன்ற ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. பூரண மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும் என்ற பெண்களின் கோரிக்கையை தமிழக அரசு அலட்சியப்படுத்தியுள்ளது. இந்தப் பட்ஜெட் ஏமாற்றத்தைத் தருகிறது.

ராமதாஸ்: மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு வரியில்லாத, வரி உயர்வில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான அம்சங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

10 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்த தமிழகத்தின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 4.61 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு பொருளாதார மந்த நிலை ஒரு காரணம் என்றால் இன்னொரு முக்கிய காரணம் தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மைதான். கடன் சுமை ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதும் கவலையளிக்கிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை இதுவரை செயல்படுத்தவில்லை. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லை.

ஜி.ராமகிருஷ்ணன்: புதிய வரிகள் ஏதுமின்றி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. விலைவாசியைக் கட்டுப்படுத்த கிலோ ரூ.20 விலையில் அரிசி கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது.

சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய ஒதுக்கீடும், திட்டமும் அறிவித்திருக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பான திட்ட முயற்சிகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. உள்ளாட்சிகளுக்கான நிதி, மாநில அரசின் நிதி வருவாயில் 10 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. இது 30 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.  நெடுஞ்சாலை துறையின் வசமுள்ள சாலைகளின் ஒரு பகுதியை பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் கொடுக்கப்பட்டிருப்பது சரியான அணுகுமுறை இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.