கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 2,200 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ. 2,000 கோடியும், திட்ட வடிவமைப்பு நிதிக்காக ரூ. 200
தமிழக பட்ஜெட்டில் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ. 2,000 கோடியும், திட்ட வடிவமைப்பு நிதிக்காக ரூ. 200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: பொருளாதாரத்தில் உயர் வளர்ச்சியை ஏற்படுத்த பல முக்கிய கட்டமைப்புத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடுகள் செய்ய அரசு ஆதரவு அளிக்கும். இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களின் கால அளவை மனதில் கொண்டு, செயல்படுத்தத்தக்க முக்கிய கட்டமைப்பு திட்டங்களின் தொகுப்பைக் கொண்டுள்ள "தொலைநோக்குத் திட்டம் 2023'-ன் இரண்டாவது பகுதிக்கு தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் முதல் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில், ரூ. 15 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளைப் பெற "தொலைநோக்குத் திட்டம் 2023' இலக்காகக் கொண்டுள்ளது.
2023-ம் ஆண்டில் கட்டமைப்புத் துறையில் 60 சதவீத முதலீடு தனியார் துறையிடமிருந்து பெறப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் வேகமான கட்டமைப்பு வளர்ச்சிக்கான தெளிவான கொள்கை மற்றும் நடைமுறை அமைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு ஒப்பந்தப் புள்ளிகளில் ஒளிவுமறைவின்மை விதிகளோடு, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு சட்டம், விதிகள் மற்றும் வரைமுறைகள் நடப்பு ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளன. 2013-14 பட்ஜெட்டில், கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ. 2,000 கோடியும், திட்ட வடிவமைப்பு நிதிக்காக ரூ. 200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
Advertisement