முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 4 ; மதுரையில் 2 புதிய மேம்பாலங்கள்

சென்னையில் 4 பெரு மேம்பாலங்கள், மதுரையில் 2 மேம்பாலங்கள் கட்டப்படும் என்று தமிழக பட்ஜெட்டில்

Updated On : 22 மார்ச், 2013 at 4:55 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

சென்னையில் 4 பெரு மேம்பாலங்கள், மதுரையில் 2 மேம்பாலங்கள் கட்டப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்:

சென்னை மாநகரப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆய்வுகளின் அடிப்படையில் தேவைகளைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் 2013-14-ம் ஆண்டில் நான்கு பெரு மேம்பாலங்கள் ரூ. 271.68 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

Advertisement

இதுபோல் மதுரையில் காளவாசல் மற்றும் கோரிப்பாளையத்தில் ரூ. 130 கோடி செலவில்  இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

நான்கு வழிச் சாலையாகும் ஈ.சி.ஆர்.: 2012-13-ம் நிதியாண்டில் நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் ரூ. 235 கோடி செலவில் 121 மேம்பாலங்கள் அமைக்கவும், ரூ. 211.60 கோடி செலவில் 433.72 கி.மீ. நீளமுள்ள சாலைகளை புதுப்பிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதுபோல் 2013-14-ம் நிதியாண்டில் நபார்டு வங்கியின் உதவியுடன் பல்வேறு சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 191.60 கோடியும், பாலங்கள் அமைக்கும் பணிகளுக்கு ரூ. 233 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி உப கோட்டத்தில் சோதனை அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தமுறை, பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு ரூ. 436.08 கோடி செலவில் 28 புறவழிச் சாலைகளும், மூன்று வட்டச் சாலைகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபோல் சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையை (ஈ.சி.ஆர்.) நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் 2013-14-ம் ஆண்டில் தொடங்கி செயல்படுத்தப்படும்.

மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம்: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போன்று, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பிடம் முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் ஒப்படைக்கப்பட்டு, சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தி, பராமரித்து மேலாண்மை செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

மேலும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து பன்மடங்கு உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அவற்றை மேம்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 2013-14-ம் ஆண்டில் ரூ. 6,452.77 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2012-13-ம் நிதியாண்டில் இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 5,615.71 கோடியாக இருந்தது.

மாநில நெடுஞ்சாலைகளின் தரத்தை உயர்த்தி வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு 2013-14-ம் ஆண்டில் ரூ. 2,032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.