முகப்பு
தமிழ்நாடு

இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு

இலங்கை தமிழர்களுக்காக 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க அரசியல்கட்சிகள் முன்வரவேண்டும்

Updated On : 2 ஏப்ரல் 2013, 4:18 am IST
பகிர்:

இலங்கை தமிழர்களுக்காக 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க அரசியல்கட்சிகள் முன்வரவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:

கடந்த முறை என்னை இடைநீக்கம் செய்தபோது கண்டன கூட்டம் கூட்டப்படவில்லை. அது என் தனிப்பட்ட பிரச்னை, அதை நான் பார்த்துக்கொள்வேன்.

Advertisement

Advertisement

அண்மையில் தேமுதிகவின் 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டள்ளனர். அவர்கள் ஓராண்டுக்கு சட்டப்பேரவைக்கு வரக்கூடாது, எந்த சலுகையும் கிடையாது என்று அறிவித்தனர். விசாரிக்கப்படாமலேயே தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னை காரணமாக தேமுதிக வளர்ந்துவிடும் என்ற பயத்தில்தான் ஓராண்டு இடைநீக்கம் என்பது 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க நினைக்கிறார்கள். 145 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தும் மக்களுக்கு அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆனாலும் தேமுதிக உறுப்பினர்களை இழுக்க முயற்சி செய்கிறார்கள். தங்களை பெரிய கட்சி என்று கூறிக் கொள்கிறார்கள். மக்கள் ஓட்டு போடாவிட்டால் அதுவும் சின்ன கட்சி ஆகிவிடும்.

தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை இழுக்க முயற்சித்தாலும் தேமுதிக தொண்டர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. மக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை ஒரே கையெழுத்தில் மூட முடியும்போது, மதுக் கடைகளையும் மூடமுடியாதா? தமிழகத்தில் மின்சார பிரச்னை உள்ளது. சென்னையைத் தவிர பிற பகுதிகளில் 18 மணிநேரம் வரையில் மின்தடை ஏற்படுகிறது. மீனவர் பிரச்னைக்கு கடிதங்கள் எழுதினால் மட்டுமே போதாது. தீர்வு சொல்லவேண்டும்.

கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ஈழத் தமிழர் பிரச்னைக்காக அனைத்து கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரினேன். அதே ஈழத் தமிழர் பிரச்னைக்காக 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும் புறக்கணிப்போம். தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக தயாராக உள்ளது. இதர அரசியல் கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க முன்வரவேண்டும்.

2009-ஆம் ஆண்டு தேர்தலை நாம் புறக்கணித்திருந்தால் ஈழத் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். அனைத்துக் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துகிறது. பால், மின்சாரம், பஸ் கட்டணங்களை மாநில அரசு உயர்த்தியுள்ளது. அவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க தேமுதிகவினர் பாடுபடவேண்டும் என்றார் விஜயகாந்த்.

முன்னதாக பேசிய தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்தது ஜனநாயக விரோதம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.