முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்: இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய இரு வேறு தாக்குதலில் 8 மீனவர்கள் காயமடைந்தனர்.

Updated On : 12 ஏப்ரல், 2013 at 5:10 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய இரு வேறு தாக்குதலில் 8 மீனவர்கள் காயமடைந்தனர்.

அண்மைக்காலமாக கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழர் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த மாதம் 6-ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் 30 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அனுராதபுரம் சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

இப்படி கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், பின்னர் அவர்களை கைது செய்வதும் தொடர் கதையாக உள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியைச் சேர்ந்த நா. செüந்தர்ராஜ் (45), கு. விஜயகுமார் (30), கா. மாரியப்பன் (28), ச. செல்வம் (30) ஆகிய 4 மீனவர்கள் கண்ணாடியிழைப் படகில் புதன்கிழமை பிற்பகல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரை கிழக்குப் பகுதி கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை உருட்டுக் கட்டையால் தாக்கி எச்சரித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் வியாழக்கிழமை காலை வெள்ளப்பள்ளத்தில் கரையேறினர். பின்னர், அவர்கள் 4 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே வேதாரண்யம் வட்டம், வானவன்மகாதேவி பகுதியிலிருந்து புதன்கிழமை பிற்பகல் ஒரு கண்ணாடியிழைப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ரெ. காளிமுத்து(45), ஆ. கலைமணி (35), பொ. ரவிச்சந்திரன் (40), சி. ரெங்கையன் (38) ஆகியோரும் புதன்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் வியாழக்கிழமை பிற்பகல் வானவன்மகாதேவியில் கரையேறினர்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், 2 பேருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதுடன், அவர்கள் பிடித்துவைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்து கடலில் வீசியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் சந்திப்பு: இதனிடையே நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 மீனவர்களையும் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, வேதாரண்யம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்.வி. காமராஜ், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.என். தமிழ்வாணன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், தங்கள் வலைகளையும் சேதப்படுத்திவிட்டதாக சிகிச்சை பெற்று வரும் மீனவர்கள் ஆட்சியரிடம் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுவிப்பு

இலங்கை கடற்படையினரால் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19 பேரை விடுவித்து இலங்கை மன்னார் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமேசுவரத்தைச் சேர்ந்த சேவியர், சூசை அருளானந்தம், ராஜு, தூண்டிராஜு ஆகிய 4 பேருக்குச் சொந்தமான படகுகளில் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 19 பேர் கடந்த மார்ச் 13 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைதுசெய்து, தலைமன்னார் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 19 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 19 பேரும் வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) எம்.எம்.சர்புதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 19 பேரையும் நீதிபதி விடுவித்து உத்தரவு பிறப்பித்தார். விடுவிக்கப்பட்ட 19 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல் படையினரிடம் வெள்ளிக்கிழமை காலையில் ஒப்படைக்கப்பட்டு, மாலையில் ராமேசுவரம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களை விடுதலைசெய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) பாம்பன் ரயில் பாலத்தில் மறியல் நடத்த திட்டமிட்டிருந்தனர். இலங்கை நீதிமன்றம் இவர்களை விடுவித்ததைத் தொடர்ந்து, ரயில் மறியலை மீனவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

இவர்கள் 19 பேரைத் தவிர, ராமேசுவரம் மீனவர்கள் 30 பேர் இம் மாதம் 6-ஆம் தேதி கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இம் மாதம் 18-ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, 18-ஆம் தேதி இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.