காலடியின் தடங்கள்
கல்வியாளர்கள், இளைய தலைமுறையினர் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல்.
காலடியின் தடங்கள்- முனைவர் சி. சுப்பிரமணியம்; பக். 196; ரூ. 200; காவ்யா வெளியீடு, சென்னை-600 024, ✆ 044- 2372 6882.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. துணைவேந்தராக இருந்த நூலாசிரியரின் வாழ்க்கை வரலாறு. தனது பள்ளி, கல்லூரி மாணவர் பருவம், பேராசிரியராகப் பணி, கல்லூரி ஆசிரியர் கழகப் பணி, துணைவேந்தர் பணிகளில் என்று தனது வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களைப் பதிவு செய்துள்ளார்.
மாணவப் பருவத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள், தேர்தல் அனுபவம், பேச்சாளர் அனுபவம் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளார்.
Advertisement
Advertisement
அப்துல் கலாம், எம்ஜிஆர், கருணாநிதி போன்ற ஆளுமைகளுடன் ஏற்பட்ட அனுபவம், பெற்றோர், உறவினர்களால் தான் பெற்ற அனுபவம் போன்றவற்றையும் நூலாசிரியர் விளக்குகிறார். தனது பணிக்காலத்தில் நடைபெற்ற ஆய்வுகள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் அருமை.
பல்கலைக்கழக துணைவேந்தராய் செய்த சாதனைகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் குறிப்பிட்டுள்ள நூலாசிரியர் தனது பணிக்காலம் முடிந்த சூழலில் அவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய வேண்டுகோள் கடிதங்களையும் இணைத்துள்ளார்.
கல்வியாளர்கள், உயர்பொறுப்பில் இருப்போர் நூல்களை எழுத வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது இந்த நூல். வாழ்க்கை வரலாற்று நூல் என்றால், தவறுகளோ, முக்கிய பிரமுகர்கள் குறித்த தகவல்களோ வெளியே வரும் என்று கூறப்படும் நிலையில், நல்ல சிறப்பான, தரமான தகவல்களை கொண்டு யாருடைய மனதையும் புண்படுத்தாமல் எழுதப்பட்ட இது போன்ற நூல் வரவேற்கக்கூடியதாகும். கல்வியாளர்கள், இளைய தலைமுறையினர் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல்.