முன் விரோதத்தால் குடந்தை அருகே தந்தை, மகன் வெட்டிக் கொலை
கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
கும்பகோணம் அருகேயுள்ள நாதன்கோவில் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சேட்டுமகன் ஆனந்தன் (55). சைக்கிளில் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கோமதி. இவர்களது மகன் ஜெகதீஸ்வரன் (24) பெயிண்டர்.
இவர்களது பக்கத்து வீட்டில் முத்து மகன் அம்பிகாபதி வசித்து வருகிறார். ஆனந்தன் மற்றும் அம்பிகாபதி குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
Advertisement
இந்நிலையில் சனிக்கிழமை இரு குடும்பத்தினருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அம்பிகாபதி மற்றும் அவரது சகோதரர்கள் நந்தகுமார், அய்யப்பன், தாய் சுலோச்சனா, நண்பர்கள் மோகன், ராஜ்குமார், கந்தன் உள்ளிட்ட 8 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆனந்தனையும், அவரது மகன் ஜெகதீஸ்வரனையும் வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த தந்தை, மகன் இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஜெகதீஸ்வரன், ஆனந்தன் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த இரட்டைக் கொலை குறித்து ஆனந்தன் மகள் ஓவியா பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து 8பேரை தேடி வருகின்றனர்.
பாபநாசம் டி.எஸ்.பி. சீனிவாசன், கும்பகோணம் டி.எஸ். பி. சிலம்பரசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.