5 பஸ்கள் எரிப்பு, 120 பஸ்கள் உடைப்பு: 2,800 பா.ம.க.வினர் கைது
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினர் வட மாவட்டங்களில் பஸ்ஸýக்கு தீ வைப்பது, சேதப்படுத்துவது போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினர் வட மாவட்டங்களில் பஸ்ஸýக்கு தீ வைப்பது, சேதப்படுத்துவது போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர்.
இதில் புதன்கிழமை மாலை வரை 5 பஸ்கள் எரிக்கப்பட்டிருப்பதாகவும் 120 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
அனுமதியின்றி போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 2,800 பேர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க. சார்பில் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் போராட்டம் நடத்த வந்த அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல 2012-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் ஜாதி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்குக்காக அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை மற்றும் வட மாவட்டங்களில் அந்தக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பஸ் உடைப்பு, பஸ் எரிப்பு போன்ற வன்முறைச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழக காவல் துறையின் வட மண்டல ஐ.ஜி. பெ. கண்ணப்பன், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 5 அரசு பஸ்களை அந்தக் கட்சியினர் தீ வைத்து எரித்ததாகவும், மாநிலம் 120 அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
வன்முறையில் ஈடுபட்டதாகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும் மாநிலம் முழுவதும் அந்தக் கட்சியைச் சேர்ந்த 2,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், போராட்டம் நடத்துதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் 4 பஸ்கள் உடைப்பு:சென்னையில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 163 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புதன்கிழமையும் அந்தக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாலை மறியலில் ஈடுபட்டதாக செங்குன்றம் பாடியநல்லூரில் 8 பேர், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் 22 பேர், புது வண்ணாரப்பேட்டையில் 20 பேர், ராயபுரத்தில் 17 பேர், கோயம்பேடு நெசப்பாக்கத்தில் 35 பேர், எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே 5 பேர் என மொத்தம் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், போராட்டம் நடத்தியது என இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே செவ்வாய்க்கிழமை இரவு திருமுல்லைவாயில், ஆவடி, பட்டாபிராம், கொரட்டூர் ஆகிய இடங்களில் 4 அரசு பஸ்கள் மீது பாமகவினர் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர்.
திருமுல்லைவாயிலில் பஸ் கண்ணாடியை உடைத்ததாக அந்தக் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பாதுகாப்பு: சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக கூடுதலாக போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.