முகப்பு
தமிழ்நாடு

ரூ.50 கோடி நிலம் அபகரிப்பு: அரசு அதிகாரிகள் 4 பேர் கைது

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 50 கோடி மதிப்புள்ள நிலத்தை லாரி உரிமையாளர் ஒருவர் அபகரிப்பதற்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற ஆவின் பொது மேலாளர் உள்பட 4 பேரை நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.

Updated On : 12 ஜூன், 2013 at 2:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 50 கோடி மதிப்புள்ள நிலத்தை லாரி உரிமையாளர் ஒருவர் அபகரிப்பதற்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற ஆவின் பொது மேலாளர் உள்பட 4 பேரை நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராணுவப் பயிற்சி மையம் அருகே 12.12 ஏக்கர் நிலம் தலா 2400 சதுர அடி வீதம் 41 பேர் பெயரில் தனித்தனி பட்டாவுடன் இருந்துள்ளது. இந்த நிலத்துக்குரியவர்கள் திருச்சி கே.கே. நகர் இந்தியன் வங்கி காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ராஜரத்தினம் தலைமையில் ராஜராஜசோழன் மக்கள் நலச்சங்கம் என்ற பெயரில் சங்கம் அமைத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் இடையர் தெருவைச் சேர்ந்த லாரி அதிபர் ம. கந்தசாமி என்பவர் போலி ஆவணங்களைத் தயார் செய்து ரூ. 50 கோடி மதிப்புடைய 12.12 ஏக்கர் நிலத்தை அபகரித்துவிட்டாராம்.

Advertisement

இதையறிந்த ராஜராஜசோழன் மக்கள் நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை பல்வேறு நிலைகளில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வாசுகி கடந்த 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்குமாறு திருச்சி மாநகர நில அபகரிப்புப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து பதிவுத் துறை, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை, வருவாய்த் துறையில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் கந்தசாமி போலி ஆவணங்களைத் தயார் செய்து நிலத்தை அபகரித்ததும், அவருக்கு உடந்தையாக அரசுத் துறை அதிகாரிகள் இருந்தும் தெரிய வந்தது.

இதையடுத்து, லாரி அதிபர் ம. கந்தசாமி, அப்போது மண்டலத் துணை வட்டாட்சியராக இருந்து பின்னர் மதுரை ஆவின் பொதுமேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தமிழ்ச்செல்வி, அப்போதைய வட்டாட்சியர் குமரேசன், நகர வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ராதாகிருஷ்ணன், நகர சார் ஆய்வாளர் நாகராஜன், தனி வட்டாட்சியர் அப்துல் ஜலீல், நில அளவையர்கள் ராஜ்குமார், சிவசங்கரன், சாகுல் ஹமீது, வட்டத் துணை ஆய்வாளர் பால்துரை ஆகிய 10 பேர் மீது நில அபகரிப்புப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பால்துரை தற்போது இறந்துவிட்டார். சாகுல் ஹமீதுக்கு வழக்கில் தொடர்பு இல்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து, லாரி அதிபர் கந்தசாமி, ஓய்வு பெற்ற ஆவின் பொது மேலாளர் தமிழ்ச்செல்வி, தற்போது நில அளவையர்களாகப் பணியாற்றும் ராஜ்குமார், சிவசங்கரன் ஆகிய 4 பேரையும் திங்கள்கிழமை இரவு கைது செய்த நில அபகரிப்புப் போலீஸார், அவர்களை நீதித் துறை நடுவர் மன்றத்தில் (எண் 2) ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள குமரேசன், ராதாகிருஷ்ணன், தனி வட்டாட்சியர் அப்துல் ஜலீல், நகர சார் ஆய்வாளர் நாகராஜன் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

நில அளவையர்கள் பணி நீக்கம்: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நில அளவையர்கள் ராஜ்குமார், சிவசங்கரன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நில அளவைத் துறை உதவி இயக்குநர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அபகரிக்கப்பட்ட நிலத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், நிலத்துக்குரியவர்கள் தங்களது இடத்துக்குச் சென்று, பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பணிகளை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.