முகப்பு
தமிழ்நாடு

பள்ளி மாணவரைக் கடத்திய வழக்கு: 2 கல்லூரி மாணவர்கள் கைது: ரூ. 9.45 லட்சம் ரொக்கம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் கடந்த வாரம் தனியார் பள்ளி மாணவரை கடத்திய வழக்கில் தொடர்புடைய 2 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 9.45 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On : 22 ஜூன், 2013 at 3:34 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் கடந்த வாரம் தனியார் பள்ளி மாணவரை கடத்திய வழக்கில் தொடர்புடைய 2 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 9.45 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கொத்தம்பட்டியைச் சேர்ந்தவர் அருணாசலம். அரியாண்டிபட்டி ஊராட்சியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் அழகேசன் (13), கந்தர்வகோட்டையிலுள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் அருணாசலம் வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்த சிலர், அழகேசனைக் கடத்திச் சென்றனர்.

Advertisement

அவரை திரும்ப அனுப்ப வேண்டுமெனில் பணம் தர வேண்டுமெனவும் மாணவரின் பெற்றோர் அருணாசலம் - ராணி ஆகியோரிடம் கடத்தல்காரர்கள் பேரம் பேசினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், 8 தனிப்படைகள் அமைத்து மாணவரை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனிடையே, கடத்தல்காரர்கள் ரூ. 10 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை மாணவரை விடுவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தஞ்சை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பிரேம் (எ) பிரேம்குமார் (21), ரமேஷ் கண்ணா (22) ஆகிய 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 9.45 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவரும் தஞ்சையிலுள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு... இதுகுறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐஜி ராமசுப்பிரமணி கூறியது:

பள்ளி மாணவர் கடத்தல் வழக்கில் அமைக்கப்பட்ட 8 தனிப்படையினர் கிராமங்களில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டதால், கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தாங்கள் பதுங்கி இருந்த பகுதியைவிட்டு வெளியேற முடியாத வகையில் முடக்கி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, வல்லம் மூப்பனார் தெருவில் அண்மையில் வீடு வாடகைக்கு எடுத்த நபர்கள் குறித்து நடத்திய ரகசிய விசாரணையில், அரியாணிப்பட்டி தெற்கு தெருவில் வசிக்கும் கோவிந்தராசு மகன் பிரேம்குமார் என்ற பிரேம். (இவர் தஞ்சை தனியார் கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு மாணவர்) மற்றும் அவரது நண்பரான பூதலூர் அண்ணாநகர் ரவிக்குமார் மகன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் வீடு வாடகைக்கு எடுத்திருப்பது தெரிய வந்தது.

இவர்கள் இருவர் குறித்தும் விசாரணை நடத்திய போது இருவரும் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. பல இடங்களில் தனிப்படையினர் தேடி வந்த நிலையில், ராஜேஷ் கண்ணா வெள்ளிக்கிழமை காலை பூதலூரிலும், அவர் அளித்த தகவலின் பேரில், தஞ்சை ரயில் நிலையத்தில் பிரேம்குமாரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மாணவர் அழகேசனின் தந்தையிடம் பெற்ற ரூ. 10 லட்சத்தில் மீதமுள்ள 9.45 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது. மேலும், இரு சக்கர வாகனமும், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.