தருமபுரி கலவர விவகாரம்: காதல் திருமணம் செய்த பெண் தொடர்ந்து தாயாருடன் தங்கியிருக்க விருப்பம்
தருமபுரி கலவரத்தோடு தொடர்புடைய, காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா தொடர்ந்து தனது
தருமபுரி கலவரத்தோடு தொடர்புடைய, காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா தொடர்ந்து தனது தாயாருடன் தங்கியிருக்க விரும்புவதாக உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாயில் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 7-ஆம் தேதி அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.
இந்நிலையில் தனது மகளை இளவரசன் என்பவர் கடத்திச் சென்று சட்ட விரோதமான முறையில் திருமணம் செய்து கொண்டதாகவும், அந்தத் திருமணம் செல்லாதது என்றும், தனது மகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரி திவ்யாவின் தாயார் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
Advertisement
இந்த வழக்கு கடந்த ஜூன் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தனது தாயாருடன் சில காலம் தங்கியிருக்க விரும்புவதாக திவ்யா தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தனது தாயாருடன் தங்கியிருக்க அவருக்கு அனுமதி அளித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் தங்கள் அறையில் வைத்து விசாரித்தனர். சம்பந்தப்பட்ட பெண் திவ்யாவிடம் தனியாக விசாரணை நடத்திய நீதிபதிகள், பின்னர் வழக்குரைஞர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தன்னை திருமணம் செய்து கொண்ட இளவரசன் மீது எவ்வித குறையும் இல்லை என்றும், இளவரசன் வீட்டில் தங்கியிருந்தபோது அவரது குடும்பத்தினர் தன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டனர் என்றும் நீதிபதிகளிடம் திவ்யா கூறியதாகத் தெரிகிறது. எனினும் தங்கள் திருமணத்துக்குப் பின் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டது, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஆகியவற்றை தன்னால் மறக்க முடியவில்லை என்று திவ்யா கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் தனது தாயாருடன் தொடர்ந்து தங்கியிருக்கவே விரும்புவதாகக் கூறிய திவ்யா, ஒருவேளை தற்போது தான் இளவரசனுடன் சென்றால் தனது தாயார் மற்றும் தம்பியையும் இழக்க நேரிடலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளார். ஆகவே, தனது திருமணத்தை தனது தாயார் ஏற்றுக் கொள்ளும் வரை அவருடனேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்புவதாக திவ்யா கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 3-ஆம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.