பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 40,000 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் ஞாயிற்றுக்கிழமை தமிழக எல்லையை வந்தடைந்ததை அடுத்து, பிலிகுண்டுலுவில் நீர்வரத்தானது நொடிக்கு 40,000 கன அடியாக உயர்ந்தது.
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் ஞாயிற்றுக்கிழமை தமிழக எல்லையை வந்தடைந்ததை அடுத்து, பிலிகுண்டுலுவில் நீர்வரத்தானது நொடிக்கு 40,000 கன அடியாக உயர்ந்தது.
கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால், கபினி அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி, கர்நாடகம் நொடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரியாற்றில் திறந்துவிட்டுள்ளது.
இதையடுத்து, காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் சனிக்கிழமை நொடிக்கு 15,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் படிப்படியாக உயர்ந்தது. காலை 10 மணிக்கு நொடிக்கு 30,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 40,000 கன அடியை எட்டியது என தேசிய நதிநீர் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையின் மேல் தண்ணீர் செல்வதால், அங்கு கயிறு கட்டித் தடை ஏற்படுத்தி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகேனக்கல்லுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இந்த நிலையில், ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், வெள்ள அபாயம் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேட்டூர் அணைக்கு...: இதனிடையே, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து திங்கள்கிழமை அதிகரிக்கும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 18,937 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை 17,075 கன அடியாகக் குறைந்தது.
இந்த நிலையில், கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீர் திங்கள்கிழமை அதிகாலை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.75 அடியாக இருந்தது. குடிநீர்த் தேவைக்கு நொடிக்கு 3,800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. நீர் இருப்பு 38.79 டி.எம்.சியாக இருந்தது.