முகப்பு
தமிழ்நாடு

திருமயம் "பெல்' நிறுவனத்துக்கு பிரதமர் இன்று வருகை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் அமைக்கப்பட்டுள்ள "பெல்' நிறுவனத்தை திறந்து வைக்க பிரதமர் மன்மோகன்சிங் வெள்ளிக்கிழமை இங்கு வருவதையொட்டி போலீஸார் ஐந்தடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 2:15 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் அமைக்கப்பட்டுள்ள "பெல்' நிறுவனத்தை திறந்து வைக்க பிரதமர் மன்மோகன்சிங் வெள்ளிக்கிழமை இங்கு வருவதையொட்டி போலீஸார் ஐந்தடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருமயம் அருகே ஓலைக்குடிப்பட்டியில் சுமார் 57 ஏக்கரில் ரூ. 600 கோடி மதிப்பில் "பெல்' ஆலையின் புதிய பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், இத்தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், ஆளுநர் ரோசையா, மத்திய கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் பிரபுல்படேல், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், "பெல்' நிறுவன உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பங்கேற்க புதுதில்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருமயத்தில் அமைக்கப்பட்டுள்ள இறங்கு தளத்துக்கு வருகிறார். பின்னர் குண்டு துளைக்காத காரில் ஆலை வளாகத்துக்கு சென்று தொழிற்சாலையைத் திறந்து வைக்கிறார். அதன்பின்பு பேட்டரி கார் மூலம் ஆலையை சுற்றிப்பார்த்த பிறகு, அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

Advertisement

திருமயம் மற்றும் ஓலைக்குடிப்பட்டியில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்கில் சிறப்பு பாதுகாப்புப் படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸாரும், அடுத்த 3 அடுக்கு பாதுகாப்பில் தமிழக போலீஸாரும், உளவுத்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகை திருவாரூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலையின் நுழைவு வாயிலில் "மெட்டல் டிடெக்டர்' கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வியாழக்கிழமை முற்பகலில் விமானப்படை அதிகாரிகள் தொழிற்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி, ஏற்றி ஒத்திகை பார்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.