முகப்பு
தமிழ்நாடு

அழிவின் விளிம்பில் குள்ள நரி! 

கிராமப் பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சுற்றித் திரிந்த குள்ள நரிகள் இப்போது காணப்படுவதில்லை என்று

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

கிராமப் பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சுற்றித் திரிந்த குள்ள நரிகள் இப்போது காணப்படுவதில்லை என்று காட்டுயிர் ஆர்வலர்களும், விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
 மனிதர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள முள்புதர்க் காடுகள், விவசாய நிலங்கள், சமவெளிப் புல்வெளிகள், வறண்ட நிலப்பகுதிகள் போன்ற இடங்களில் வாழ்பவை குள்ள நரிகள்.
 முன்னர், கிராமப்புறங்களில் விவசாய நிலங்களுக்கு அருகில் விவசாயிகளின் நண்பனான இவை வாழ்ந்தன. இவற்றின் முக்கிய உணவு எலிகள்.
 நரி (Golden Jackal), குள்ள நரி (Indian fox), ஓநாய் (Indian Wolf), பாலைவனக் குள்ள நரி (Desert Fox), செந்நாய் (Wild dog or Dhole) ஆகியவை இந்தியாவில் தென்படும் நாய் இனத்தைச் சேர்ந்த அரிய வன விலங்குகள்.
 இவற்றில் தமிழகத்தின் அடர்ந்த காடுகளில் செந்நாயும், புதர்க்காடுகளில் நரியும் தென்படும். ஆனால், குள்ள நரியோ வயல்வெளிகள் உள்ள கிராமங்கள், புதர்க் காடுகள், மலை மீதுள்ள புல்வெளிகள், அடர்ந்த காடுகள் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும்.
 உணவுப் பழக்கம்: பருவ காலத்திற்குத் தகுந்தவாறு எந்த உணவு கிடைக்கிறதோ அவற்றை உள்கொண்டு குள்ள நரிகள் வாழும். இவற்றின் உணவில் பெரும்பகுதி எலி, முயல், பாம்பு, பல்லி, சிறு பறவைகள் போன்றவை ஆகும்.
 இலந்தைப் பழங்கள், களாக்காய், நாவல் பழம், சரக்கொன்றை பழங்கள் முதலியவற்றையும் இவை சாப்பிடும்.
 கிராமப் பகுதிகளின் அருகில் தென்படும் நரிகள் அங்குள்ள கோழிகளையும் அவ்வப்போது பிடித்துச் செல்லும். இதன் காரணமாகவே இவை கொல்லப்படுவதுண்டு.
 கண்ணி வைத்தும், விஷம் வைத்தும் குள்ள நரிகள் பல இடங்களில் கொல்லப்படுகின்றன. வாகனங்களில் அடிபட்டும் இவை பலியாகின்றன. இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-இன் படி நரிகளைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
 நரியால் என்ன பயன்? வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் உணவுச் சங்கிலியின் மேல்நிலை இரைக்கொல்லிகளாக (Predators) அங்கம் வகிக்கின்றன. அவற்றுக்கு அடுத்து வருபவை நரி, குள்ள நரி போன்ற விலங்குகள். இவை பலதரப்பட்ட சிறிய விலங்குகளையும், பறவைகளையும் உணவாக்கி அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன; பழங்களை உட்கொண்டு விதைப் பரவலுக்கும் உதவுகின்றன. வயல்களின் அருகில் சுற்றித் திரியும் நரிகள் அங்குள்ள எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
 இதுகுறித்து வன உயிரின ஆர்வலர் ஜெகன்நாதன் கூறியது:
 ஏப்ரல் 2008-ஆம் ஆண்டிலிருந்து மே 2009-ஆம் ஆண்டு வரை, மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் உள்ள 394 வனச்சரகங்களுக்கு ஆராச்சியாளர்கள் சென்று, அங்கு பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளிடமும், வனத்தில் பல காலமாக வாழும் கிராம மக்களிடமும் 18 வகையான மிருகங்களின் நிலையைப் பற்றி விசாரித்தனர்.
 வேங்கைப் புலி, கரடி, சிறுத்தை, செந்நாய், நரி, யானை, காட்டெருமை, கடம்பை மான், வரையாடு, காட்டுப் பன்றி, புள்ளிமான், கேளையாடு, சருகு மான், நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, சோலை மந்தி (சிங்கவால் குரங்கு), நாட்டுக் குரங்கு, மலையணில் ஆகியவற்றின் தற்போதைய நிலையையும், 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையையும் கேட்டறிந்தனர்.
 பலகாலமாக இப்பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் அளித்த தகவல்களைம ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகள் தெரிய வந்தன.
 ஒருகாலத்தில் எங்கும் பரவியிருந்த நரியினம் தற்போது பல இடங்களில் மாயமாய் மறைந்து போனது முக்கியமான தகவலாகும். அதைத் தொடர்ந்து, நரிக்கென்றே தனியாக நாடு தழுவிய வலைத்தள கணக்கெடுப்பு ஒன்று 2011 ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்பட்டது.
 அதில் சுமார் 320 பேர் பங்கற்றனர். அதில், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் நரியைக் கண்டறிந்த 470 தகவல்கள் கிடைத்தன. பெரும்பாலான தகவல்கள், கர்நாடகம், உத்தரகண்ட் மாநிலங்களிலிருந்து கிடைத்தன.
 இந்த ஆய்வின் மூலமாக நரியின் தற்போதைய நிலையையும், பரவலையும், துல்லியமாக அறிய முடியாவிட்டாலும், இந்தியாவின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் நரிகள் அருகி வருவதையும், குஜராத், மத்தியபிரதேசத்தில் அதன் எண்ணிக்கை ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பதையும் முதல்நிலை முடிவுகள் காட்டின.
 வாழ்விடம் அருகியதே நரிகள் குறைந்து போனதற்கான முக்கிய காரணமாக அறியப்பட்டது. இதற்கு நகரமயமாதலே காரணம் என்றார் ஜெகநாதன்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments