தமிழ்நாடு

செஞ்சி அருகே மலைக் குகைகளில் சமணர் படுகைகள்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மலைக் குகைகளில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் படுகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பழங்காலத்தில் வாழ்ந்த சமயத் துறவிகள், மலைக் குகைகளை இருப்பிடமாக தேர்வு செய்து வாழ்ந்தனர். மக்களுடன் வாழ்ந்தால், ஆசையால் எழும் இன்னல்கள் தங்களது துறவறத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால், இயற்கைச் சூழலை ஒட்டிய மலைப் பகுதிகளில் அவர்கள் தஞ்சமடைந்தனர்.
இந்தத் துறவிகள் இயற்கையான மலைக் குகைகளில் கரடுமுரடான தரைப் பகுதிகளில் வாழ்ந்தனர். பிற்காலத்தில், தங்களுக்கு ஏற்ற வகையில் கல் படுகைகளையும், இருக்கைகளையும், மன்னர்கள், செல்வந்தர்கள் தயார்படுத்தி கொடுத்த இடத்தையும் பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு சமணத் துறவிகள் தங்கியிருந்த மலைகள், பஞ்ச பாண்டவர் மலை, ஐவர் மலை, ஆண்டிமலை போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. பண்டைய காலத்தில் மதுரையில் இருந்த சமணம், பிறகு விழுப்புரம் மாவட்டம், செஞ்சிப் பகுதியில் பரவியதாக இங்குள்ள சமணர் படுகைகளும் கல்வெட்டுக்களும், சிற்பங்களும் தகவல் தெரிவிக்கிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் த.ரமேஷ், த.ரங்கநாதன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர் சீனு, முண்டியம்பாக்கம் ஜோதிபிரகாஷ் உள்ளிட்டோர் சமணத்தைப் பற்றி ஆய்வு செய்த போது, சமணர் படுகைகள் கொண்ட குகையை கண்டறிந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
மாணவர் சரத்ராஜ் கொடுத்த தகவலிலின்படி, செஞ்சி வட்டம், ஒட்டம்பட்டு அருகே வரிக்கல் என்ற ஊரில் உள்ள சிவகிரி மலையில், சமணர் படுகைகள் இருந்த குகை தெரிய வந்தது.
செஞ்சி சுற்றுப்புற பகுதிகளில் மலைகள் சூழ்ந்து இருப்பதால், அங்குள்ள குகைகளில் சமணத் துறவிகள் வசித்துள்ளனர்.
திருநாதர் குன்று, ஊரணித்தாங்கல், தொண்டூர், நெகனூர்பட்டி, ஆனத்தூர், அவலூர்பேட்டை, மேல்கூடலூர், சே.புதூர், தளவானூர் போன்ற பல இடங்களில் சமணர் படுகைகள் காணப்படுகின்றன.
சிவகிரி மலையின் தெற்கே 89 அடி நீளம் கொண்ட குகை உள்ளது. இந்தக் குகையின் நெற்றிப் பகுதியில் ஆங்காங்கே ஐந்து இடங்களில் நீர் வடி விளிம்புகள் வெட்டப்பட்டுள்ளன. நீண்ட இந்தக் குகையின் கிழக்குப் பகுதியில் பிற்காலத்தில் சுவர் வைக்கப்பட்டு, சிவன், முருகன் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தக் குகையின் அடித்தளப் பகுதிகளில் கருங்கற்கள் பிற்காலத்தில் பரப்பப்பட்டுள்ளதால், அதன் கீழ் உள்ள படுகைகளை முழுவதும் அறிய முடியவில்லை. இருந்த போதிலும், குகையின் மேற்குப் பகுதியில் சிறிய அறை போன்று சுவர்களால் தடுக்கப்பட்டுள்ளது.
இங்கு 10 சமணர் படுகைகள் உள்ளன. இந்தக் குகை நீண்ட பெரிய குகையாக இருப்பதால், அதிகளவில் சமணத் துறவிகள் தங்கியிருந்திருக்க வேண்டும். அவர்கள் தங்குவதற்கு வசதியாக படுகைகள் அதிக எண்ணிக்கையில் இருந்திருக்கிறது. ஆனால், அவை மறைக்கப்பட்டு தற்போது 10 சமணர் படுகைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இந்தச் சமணர் படுகைகள் 2000 ஆண்டுகள் பழைமையானதாகும். இவை சங்க காலத்தில் சமண சமயம் இந்தப் பகுதியில் சிறப்புடன் விளங்கியதை எடுத்துக்காட்டுகிறது. மலையின் கீழ் பகுதியில் தெற்குப் புறமாக சிறிய பாறையில் சமணர் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சமணத்துடன் தொடர்புடைய ஜைனகிரி என்ற பெயர் கொண்ட இந்த மலை, 200 ஆண்டுகளுக்கு முன்னர், சிவகிரி என மாற்றப்பட்டுள்ளது. இந்த மலையின் உச்சிப் பகுதியில், சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான கோயில் இருந்திருக்கிறது. அங்குள்ள செங்கல்லின்லி நீளம் 34 செ.மீ. , அகலம் 18 செ.மீ. இதிலிருந்து இந்தக் கோயில் சங்க காலத்தை சேர்ந்தது என்பதை உறுதியாகிறது. அரிக்கமேடு பகுதியில் சங்க காலத்தில் காணப்படும் செங்கல் அளவில் இது ஒத்துப்போகிறது. 
சங்க காலத்தில் சமணக் கோயிலோ அல்லது முருகர் கோயிலோ இந்த மலையின் உச்சிப் பகுதியில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதால், சங்க காலத்தில் இந்த ஊர் சிறப்பு பெற்று விளங்கியதை அறிய முடிகிறது என்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT