தமிழ்நாடு

கச்சத்தீவு திருவிழா: நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி கோரிய மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்க மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மீன்வளத் துறை ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் ஓலைகுடா பகுதியைச் சேர்ந்த பிரின்சோ ரெமெண்ட் தாக்கல் செய்திருந்த மனு விவரம்:
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவுக்கு மோட்டார் பொருத்திய நாட்டுப்படகுகளில் மீனவர்கள் செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, நூறு மோட்டார் படகுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதோடு, மோட்டார் படகில் செல்பவர்களுக்கு ரூ.1300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை மீனவர்கள் திருவிழாவில் பங்கேற்க முடியவில்லை. ஆகவே, திருவிழாவில் பங்கேற்க மோட்டார் பொருத்திய நாட்டுப் படகில் செல்ல மீனவர்களுக்கு அனுமதி வழங்கவும், விழா ஒருங்கிணைப்பாளரான ராமேசுவரம் வேர்கோடு புனித சூசையப்பர் ஆலய பாதிரியார் எல். சகராஜை அப்பொறுப்பில் இருந்து நீக்கியும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மீன்வளத் துறை ஆணையர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT