தமிழ்நாடு

ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை பன்னீர்செல்வம் மறைத்தது ஏன்? ராமதாஸ் அடுக்கடுக்கான கேள்வி

தினமணி

ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை பன்னீர்செல்வம் மறைத்தது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருக்கிறார். ஆனால், அதன்பின்னர் 24 மணி நேரமாகியும் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளாதது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க முடியுமா? என்பதே ஐயமாக உள்ளது.‘‘உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், தேசநலன் சார்ந்த மிக முக்கியமான விசாரணைகளுக்காக  அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களின் தலைவர்களாக மட்டுமே பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவர்; சாதாரண நீதி விசாரணைகளுக்கு பணியிலுள்ள நீதிபதிகளை அனுப்ப முடியாது’’ என்று 12.07.2002 அன்று அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். கிர்பால் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்திருகிறது. இத்தகைய சூழலில் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அதை மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றுவது தான் சாத்தியமான தீர்வாக அமையும் எனது எனது கருத்தாகும். 

இதெல்லாம் ஒருபுறமிருக்க, ‘‘முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த 75 நாட்களும் நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு ஜெயலலிதாவை சந்திக்க அனைத்து வழிகளிலும் முயன்றேன். ஆனால், ஒருமுறை கூட அவரை என்னால் நேரில் சந்திக்க முடியவில்லை’’ என்று சென்னையில் நேற்று தனியார் தொலைக்காட்சிகளுக்கு அளித்த நேர்காணலில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, ஜெயலலிதா மரணத்தில் உள்ள அனைத்து மர்மங்களும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்து தான் இந்த விஷயத்தில் அவர் மீதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஜெயலலிதாவின் மரணத்திலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஐயம் இருக்குமானால் அதுகுறித்து இவ்வளவு நாட்களாக அவர் கேள்வி எழுப்பாதது ஏன்? ஜெயலலிதா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது தமிழகத்தின் முதல்வர் பொறுப்புகளை பன்னீர் செல்வம் தான் கவனித்து வந்தார். இப்போது அவருக்கு உள்ள ஐயங்கள் அப்போதும் இருந்திருந்தால், அதுகுறித்த விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கலாம். ஆனால், அவ்வாறு எந்த அறிக்கையும் தாக்கல் செய்ய இயலாது என்று அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கச் செய்தவர் பன்னீர் செல்வம். 

ஜெயலலிதா உயிரிழந்த பிறகு அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் கோரி வழக்குகள் தொடரப்பட்டன. ஜெயலலிதாவின் மரணம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று இப்போது கூறும் பன்னீர் செல்வம், இந்த நிலைப்பாட்டை அப்போதே உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கச் செய்திருந்தால் இந்நேரம் விசாரணை தொடங்கி பாதி உண்மைகள் வெளிவந்திருக்கும். ஆனால், அப்போது விசாரணைக்கு ஆணையிடாமல் மவுனம் காத்தது ஏன்? ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிவந்து விடக் கூடாது என்ற எண்ணத்திலா? அல்லது அப்படி விசாரணைக்கு ஆணையிட்டால் தாம் வகித்து வரும் முதல்வர் பதவி தன்னிடமிருந்து பறிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தினாலா?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை தாம் ஒருமுறை கூட சந்திக்கவில்லை; அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமக்கு தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். இது நம்பும்படியாக இல்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர்கள் ஆகியோரிடம் நாள்தோறும் விளக்கியதாக அப்பல்லோ மருத்துவர் பாபு ஆப்ரகாம் இரு நாட்களுக்கு முன் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.  தலைமைச் செயலாளருக்கும், முதல்வரின் செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவல்களை அவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள பன்னீர் செல்வம் முயலவில்லையா? அல்லது அவர்கள் பன்னீர் செல்வத்துக்கு தகவல் தெரிவிக்க மறுத்து விட்டார்களா? ஒருவேளை அவர்கள் தகவல் அளிக்க மறுத்திருந்தால் அது குறித்து அப்போதே தமிழக மக்களுக்கும் ஊடகங்களுக்கு தெரிவிக்காதது ஏன்?

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிடம் நலம் விசாரிக்க வந்த மத்திய அமைச்சர்கள், பல மாநிலங்களின் ஆளுனர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட எவரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களை பன்னீர் செல்வமும், மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரையும் தான் சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக தெரிவித்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து எந்த அடிப்படையில் இந்த தகவல்களை அவர்கள் இருவரும் தெரிவித்தார்கள். யாரோ கூறியதை அல்லது கூறும்படி சொன்னதைத் தான் தலைவர்களிடம் பன்னீர்செல்வம் கூறினார் என்றால் அதற்கான கட்டாயம் என்ன? ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே விசுவாசமானவராக இருந்திருந்தால் அந்த உண்மையை அப்போதே பன்னீர்செல்வம் கூறாதது ஏன்?

தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு கடந்த அக்டோபர் 1, அக்டோபர் 22, டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போதெல்லாம் அவரை வரவேற்று அழைத்துச் சென்றது பன்னீர்செல்வம் தான். அக்டோபர் 22&ஆம் தேதி ஆளுனர் மருத்துவமனைக்கு வந்த போது, அவர் கண்ணாடி ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், அவரைப் பார்த்து ஜெயலலிதா கையசைத்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதாவை ஆளுனர் பார்த்தபோது, அவரை வரவேற்று அழைத்து வந்த பன்னீர்செல்வம் உடன் செல்லவில்லையா? அல்லது ஆளுநருடன் செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டாரா? அவ்வாறு தடுக்கப்பட்டால் அது குறித்து  அப்போதே மக்களுக்கு தெரிவிக்காதது ஏன்? பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பா?

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணத்தில் உள்ள மர்மம் குறித்த அனைத்திலும்  சசிகலா குழுவினருக்கு துணையாக இருந்து விட்டு, இப்போது பிரிந்து வந்த பிறகு உத்தமர் வேடம் போட பன்னீர் செல்வம் முயல்கிறார். ஆனால், அவரது நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். இதுகுறித்து நிச்சயம் ஒருநாள் விசாரணை நடத்தப்படும். அப்போது அனைத்து உண்மைகளும் வெளிவருவது  உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT