தமிழ்நாடு

நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெருமிதம்

DIN

நீதியின் கலங்கரை விளக்கமாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது என, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற புராதன கட்டடத்தின் 125 - ஆவது ஆண்டு லட்சினை வெளியீட்டு விழா, நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் லட்சினையை வெளியிட்டு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியது:
வரலாற்று சிறப்புமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன். இந்த நீதிமன்ற கட்டடம், புராதன கட்டடத்துக்குச் சான்றாக இன்றளவும் விளங்குகிறது. சிறந்த கட்டட வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு, ரூ. 13 லட்சம் செலவில், 4 ஆண்டுகளில் இக்கட்டடம் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது.
இதற்காக உழைத்த வடிவமைப்பாளர்கள், கட்டுமானப் பொறியாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் உழைப்பு இன்றளவும் நினைவுகூரத்தக்கது. அதேபோல், பல்வேறு கால சூழலில் நீதிமன்ற கட்டடம் 125 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் கம்பீரமாக இருப்பதற்கு நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், பொதுப்பணித் துறை பொறியாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
எந்தவொரு புராதன கட்டடத்துக்கும் இல்லாத வகையில், அனைவரும் வந்து செல்லும் இடமாக, இன்றளவும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது.
அந்தக் காலங்களில் இந்நீதிமன்றத்தில் இருந்த கலங்கரை விளக்கம், 20 மைல்களுக்கு அப்பால் வரும் கப்பல்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. அதைவிட, நீதியை நிலைநாட்டுவதில் சென்னை உயர் நீதிமன்றம் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது என்றார் அவர்.
விழாவில், உயர் நீதிமன்ற புராதன கட்டட குழுத் தலைவர் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்னிலை வகித்தார். உயர் நீதிமன்ற கட்டடத்தை பராமரித்து வரும் பொறியாளர்கள், புராதன கட்டட பணியாளர்களை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் கௌரவித்தார்.
இதில், மூத்த வழக்குரைஞர்கள் பராசரன், என்.எல்.ராஜா, வரலாற்று ஆய்வாளர் முத்தையா, பார் கவுன்சில் சங்கத் தலைவர் விஜய நாராயணன், பொதுப்பணித் துறை பொறியாளர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT