தமிழ்நாடு

தமிழகமெங்கும் சிலம்பை ஒலிக்கச் செய்தவர்: சிலம்பொலி செல்லப்பனுக்கு தமிழறிஞர்கள் புகழாரம்

DIN

தமிழகமெங்கும் சிலம்பை ஒலிக்கச் செய்தவர் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் என தமிழறிஞர்கள் புகழாரம் சூட்டினர்.
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் 90-ஆவது பிறந்தநாள் விழா, சிலப்பதிகாரப் பெருவிழா சென்னையில் புதன்கிழமை (செப்.20) நடைபெற்றது. இந்த விழாவுக்கு அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம்-ஆனந்தம் சேவா சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. 
விழாவில், 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசியது: ஒரு படைப்பாளி தனது படைப்பை அறிஞர் சபையின் முன் வைத்து அரங்கேற்றுவது என்ற வழக்கத்தை தமிழன்தான் உலகுக்கு அறிமுகப்படுத்தினான். அதேபோன்று மொழியை முன்னிறுத்தி அதற்காக நடக்கும் கூட்டத்தில் சாமானிய மக்களையும் கலந்துகொள்ளச் செய்யும் பண்பும் தமிழகத்துக்கே உரித்தான தனித்துவம். அகவை 90 கடந்த இலக்கிய ஆளுமை உள்ள ஒருவருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் இப்படித் திரளாக மக்கள் கலந்து கொள்வது என்பது வேறு எங்கும் காண முடியாத நிகழ்வு. தமிழுக்குத் தரப்படும் மரியாதை.
இளவரச அமிழ்தன், தனது அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத்தின் மூலம் சிலப்பதிகாரப் பெருவிழா நடத்தி, அதில் சிலம்பே தனது மூச்சாக வாழும் சிலம்பொலியாரின் 90-ஆவது பிறந்த நாளைத் தொண்ணூறு இளம் மாணவர்களுக்கு சிலம்புச் செல்வர், சிலம்புச செல்வி விருதுகள் வழங்கி நடத்தி வரும் தமிழ்ப் பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
'சிலம்புச் செல்வர்' மபொசிக்குப் பிறகு இன்றுவரை தமிழகமெங்கும் சிலம்பு ஒலித்துக் கொண்டிருப்பதற்கு தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்தான் காரணம் என்றார் வைத்தியநாதன். 
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்: நூல்களின் திறனாய்வுக்குப் பெரும்பாலும் மேற்கத்திய அறிஞர்களின் மேற்கோள்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதை முழுமையாகத் தவிர்த்தவர் சிலம்பொலியார். தமிழ் நெறி சார்ந்த நிலையில் முற்றிலும் தமிழ் நூல்களை மட்டுமே முன்னோடியாகக் கொண்டு படைப்பிலக்கியங்களைத் திறனாய்வு செய்தது சிலம்பொலி செல்லப்பன் வகுத்த தனித்த நெறியாகும். செம்மொழியான தமிழ் மொழிக்கு இன்றளவும் வேறெந்த மொழியையும் இணையாகக் கொள்ளாத பண்பாளர் அவர். 
கவிஞர் மு.மேத்தா: மூன்று முதல்வர்களிடம் பணியாற்றிய பெருமைக்குரிய தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன். பொதுவாக அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டுவிட்டால் மதிப்பு குறையும். ஆனால், சிலம்பொலியிடம் எப்போதும் 'சிலப்பதிகாரம்', இருக்கும். சொல்லதிகாரம், எழுத்ததிகாரம் என தொல்காப்பியத்தின் மொத்த அதிகாரமும் மட்டுமல்லாமல் திருக்குறளின் 133 அதிகாரங்களும் அவர் வசம் உள்ளது. அவரது தமிழதிகாரம் தமிழ் வாழும் காலம் தொடரும் என்றார் அவர். 
இதைத் தொடர்ந்து தொழுதூர் நந்தனார் சேவாஸ்ரமம் அறக்கட்டளையைச் சேர்ந்த தடா.பெரியசாமிக்கு 'கல்வி வள்ளல் கலசலிங்கம்' விருது, கோல்டன் சிட்டி அரிமா சங்க நிறுவனர் முரசொலி சிங்காரத்துக்கு 'ஆய்வரங்க விருது' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் சிலப்பதிகாரம் குறித்து பள்ளி, கல்லூரி அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'சிலம்பொலிச் செல்வன்', 'சிலம்பொலிச் செல்வி' ஆகிய விருதுகளை 'தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் வழங்கினார். 
இந்த விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த வழக்குரைஞர் இரா.காந்தி, அமுத சுரபி இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர்கள் முத்துலிங்கம், இலக்கிய வீதி இனியவன், டி.கே.எஸ்.கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமயச் சிக்கலை தீர்க்க என்ன வழி?
சென்னையில் நடைபெற்ற சிலப்பதிகாரப் பெருவிழாவில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் பேசியது: தமிழகத்தில் ஒரு சிலம்பொலிதான் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது. இதைத் தொடர்ந்து சிலப்பதிகாரப் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 90 மாணவ, மாணவிகளுக்கு 'சிலம்பொலிச் செல்வன்', 'சிலம்பொலிச் செல்வி' விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் எங்கும் சிலம்பொலி என்பதை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் இளவரச அமிழ்தன். 'சிலம்பொலி' என்று எனக்கிருந்த தனி உடைமை இனி பொதுவுடைமையாக்கப்பட்டிருக்கிறது.
இல்லறத்தை ஏற்று உலக நன்மைகளை அனுபவித்து உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி இறைவனை வணங்கினால் இறைவனின் திருவடிகளை அடையலாம். இவ்வளவுதான் வைணவத்தின் மையக் கருத்து. ஆனால், தொடர்ந்து வந்தவர்கள் ஒரு சமயத்தை உயர்த்தியும் மற்றொரு சமயத்தைத் தாழ்த்தியும் பேசியதால் சமய காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது. 
ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்திருக்கும் சமயங்கள் குறித்த கருத்துகளைச் சொல்லி அதை முறையாகக் கடைப்பிடித்தால் நாட்டில் சமயச் சிக்கலே இருக்காது. இதைச் செய்த முதல் புலவர் இளங்கோவடிகள். அதேபோன்று 'நாராயணா' என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரும் அவரேதான். அவர் கூறிய கருத்துகள் தமிழில் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லை. 
தமிழின் பெருமைகள் தழைத்தோங்க வேண்டும்; தமிழர்கள் வாழ்வு உயர வேண்டும் அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என நினைத்தவர் இளங்கோவடிகள். அவர் தமிழுக்கு வழங்கிய சிலப்பதிகாரத்தின் பெருமைகளை மேன் மேலும் பரவச் செய்ய வேண்டியது இளைஞர்களின் கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT