தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் துவங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி!
தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் துவங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் துவங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார், தாமஸ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
அதில், கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்கியது. இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகின்றன. நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வகை பள்ளிகளைத் தொடங்க மாநில அரசு இலவச இடம் வழங்கினால் போதுமானது. ஆனால், தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் இப்பள்ளிகளை இங்கு தொடங்க முடியவில்லை. எனவே, தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த மனு, ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகள் ஆரம்பிப்பது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக தரமான கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க வேண்டும். தவறான புரிதல் காரணமாகவே நவோதயா பள்ளிகளை வேண்டாம் என்கின்றனர். இந்தியாவில் உள்ள நவோதயா பள்ளிகளில் இருந்து 14,183 பேர் நீட் தேர்வு எழுதினர். இவர்களில் 11, 875 பேர் தகுதி பெற்றிருக்கின்றனர் என்றார்.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்குவது குறித்து தமிழக அரசின் கருத்தைத் தெரிவிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இறுதி அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கை செப். 11 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து வகுப்புகளிலும் தமிழை பயிற்று மொழியாக வைத்திருப்பது குறித்து நவோதயா பள்ளிகள் தரப்பில் உறுதி தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின் வருமாறு:
தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் துவங்க அனுமதி அளிப்பது குறித்து 8 வாரத்துக்குள் முடிவு எடுத்து அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. அனுமதி அளிப்பதோடு இல்லாமல், உள்கட்டமைப்பு ஏற்படுத்தவும் தமிழக அரசு உதவ வேண்டும். பள்ளிகள் அமைய 25 ஏக்கர் நிலம் வழங்குதல், தடையில்லா சான்று விரைவில் பெற உதவுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததே பள்ளிகள் இத்தனை காலம் துவங்கப்படாததற்கு காரணம்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கினை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.