முன்னாள் துணைவேந்தரின் சொத்து ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைப்பற்றிய சொத்து ஆவணங்களைத் தாக்கல்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைப்பற்றிய சொத்து ஆவணங்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி, தனது பதவி காலத்தில் வெளிநாடுவாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரது வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி, ரூ.95 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
அந்த ஆவணங்களின் அடிப்படையில், 74 பேருக்கு முறைகேடாக சட்டப்படிப்புக்கான பட்டம் வழங்கியதாக தகவல் வெளியானது. இந்த முறைகேடுகளுக்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி, சட்டப் பல்கலைக்கழக நிதி இயக்குநர் ஜெய்சங்கர், தொலைதூர கல்வி இயக்குநர் சர்வாணி, பதிவாளர் பாலாஜி, துணைப் பதிவாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாக அதிகாரி ராஜேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி வணங்காமுடி உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர்.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் முன்ஜாமீன் வழங்க கோரியும், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.