தமிழ்நாடு

கோயில் யானை கருணைக் கொலை: உயர் நீதிமன்றம் அனுமதி

DIN

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரியை கால்நடைத் துறை மருத்துவர் பரிசோதித்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும், அந்த அறிக்கையின்படி உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி கருணைக் கொலை செய்ய அனுமதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலரான எஸ்.முரளீதரன் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஒரு மாத காலமாக சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி காலில் வலி ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படுத்தே கிடப்பதால் யானைக்கு காயம் ஏற்பட்டு அவதியுற்று வருகிறது. மருத்துவ ரீதியாக அதனைக் குணப்படுத்த முடியாது. பொக்லைன் இயந்திரத்தின் மூலம் யானையை நிற்க வைக்க முயற்சிப்பதால் அதற்கு வலி அதிகரித்ததுடன், காயமும் அதிகமாகியுள்ளது.
எனவே, அந்த யானையை கருணைக் கொலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனு குறித்து வனத் துறை மற்றும் இந்துசமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சிறப்பு மருத்துவர் குழு மூலம் யானைக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்தும் அதன் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. கருணைக் கொலை விவகாரத்தில் விலங்குகள் நல வாரியத்தை எதிர்மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்றார்.
தமிழக அரசே முடிவு எடுக்கலாம்: அரசுத் தரப்பில் யானைக்குச் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், இந்த விவகாரத்தில் விலங்குகள் நல வாரியத்தை எதிர் மனுதாரராகக் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. கருணைக் கொலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என வாதிட்டார்.
நீதிபதிகள் உத்தரவு: இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதியுற்று வரும் கோயில் யானையை சேலம் மாவட்ட கால்நடைத் துறை மருத்துவர் 48 மணி நேரத்துக்குள் பரிசோதித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய சட்ட விதிகளை பின்பற்றி அதனைக் கருணைக் கொலை செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டனர். 
இயற்கையாகவே இறக்கவிட பக்தர்கள் கோரிக்கை: இதையறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பக்தர்கள் பலரும் யானையை நேரில் வழிபட்டு குணமடைய வேண்டி வருகின்றனர். யானைக்கு போதிய சிகிச்சை அளிப்பதில் கோயில் நிர்வாகம் மெத்தனம் காண்பித்துள்ளதாகவும், யானையை கருணை கொலை செய்யாமல் இயற்கையாகவே இறக்கவிட வேண்டும் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.
வேதனை அளிப்பதாக பாகன் உருக்கம்: இதுகுறித்து யானை பாகன் பாஸ்கரன் கூறியது: கடந்த 8 ஆண்டுகளாக யானையை பராமரித்து வருகிறேன். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பொக்லைன் மூலம் புரட்டி போட்டதால்தான் அதன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு மருத்துவர்கள் முழுமையாக சிகிச்சை அளிக்கவில்லை. இந்த நிலையில், யானையை கருணைக் கொலை செய்ய அனுமதி அளித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT