தமிழ்நாடு

18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் ஏன்? உயர் நீதிமன்றத்தில் அரசு கொறடா விளக்கம்

DIN


கட்சியில் இருந்து கொண்டே முதல்வருக்கும், அரசுக்கும் எதிராகச் செயல்பட்டதால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்ததில் தவறில்லை என உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தகுதி நீக்க வழக்கு: டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
இந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் வாதம் நிறைவடைந்த நிலையில், பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரமும், தமிழக முதல்வர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதனும் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து அரசு கொறடா ராஜேந்திரன் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசு கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹ்தகி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இந்த வழக்கில் எம்.எல்.ஏ. ஜக்கையனுக்கு ஒரு விதமாகவும், மற்ற 18 பேருக்கு ஒரு விதமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றஞ்சாட்டுவது தவறானது.
இந்த விவகாரம் குறித்து பேரவைத் தலைவர் விளக்கம் கேட்ட போது ஆஜராகி விளக்கம் அளித்த ஜக்கையன், முதல்வருக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். எனவே, அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. மற்ற 18 பேர் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு கொறடா ராஜேந்திரனை குறுக்கு விசாரணை செய்யக் கோருவதை ஏற்க முடியாது.
கொறடா பரிந்துரையில் தவறு இல்லை: அதிமுக என்ற கட்சியின் பெயர், கட்சியின் கொடி மற்றும் கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதற்குத்தான் தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்ததே தவிர கட்சிக்கு தடை விதிக்கவில்லை. 
18 பேரை தகுதி நீக்கம் செய்தபோது அவர்கள் அதிமுகவில்தான் இருந்தனர். கட்சிக்குள் இருந்து கொண்டே முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராகச் செயல்பட்டதால்தான் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதில் தவறு எதுவும் இல்லை.
அதிகாரம் கிடையாது: பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. தகுதி நீக்கத்துக்கு முன் அவர்களுக்கு எதிராக உள்ள ஆதாரங்களை உரிய முறையில் பரிசீலித்த பின்னர்தான், பேரவைத் தலைவர் முடிவு எடுத்துள்ளார். எனவே, பேரவைத் தலைவரின் முடிவை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஆக.16) நீதிபதி ஒத்திவைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT