தமிழ்நாடு

2,000 அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழிக் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

DIN


தமிழகத்தில் 2,000 அங்கன்வாடி மையங்களில் ஆங்கிலவழிக் கல்வியைத் தொடங்குவதற்காக சமூக நலத்துறையுடன் இணைந்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்து அதை மாதிரிப் பள்ளியாக மாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாதிரிப் பள்ளியானது அந்த மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கெல்லாம் முன் மாதிரி பள்ளியாக உருவாக்கப்படவுள்ளது. சென்னை மாவட்டத்தில் மாதிரிப் பள்ளியாக எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நவீன கணினி மயம், தொழில்நுட்ப வசதி கொண்ட ஆய்வகங்கள், விளையாட்டு திடல், நவீன கழிவறை, ஆங்கில வழி கல்வி, மழலையர் வகுப்புகள் உள்ளிட்டவை மாதிரிப்பள்ளியின் சிறப்பம்சங்கள் ஆகும்.
பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி மாதிரிப் பள்ளிகள் தொடக்க விழா எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம், நூலகம், வகுப்பறைகளைத் தொடங்கி வைத்தார். 
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் தலா ரூ.50 லட்சம் செலவில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும். அதேபோன்று நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் முதல் வாரத்திலும், 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் செப்டம்பர் மாத இறுதியிலும் தொடங்கப்படவுள்ளன. 
விரைவில் மடிக்கணினி- மிதிவண்டி: நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்த காரணத்தினால் அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. நிகழாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள், மடிக்கணிணிகள் தடையின்றி வழங்கப்படும். கல்வியாளர்கள், பொதுமக்களின் அறிவுறுத்தலின்படி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில், பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் வாரத்துக்கு ஒரு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு ஏதேனும் இடர்ப்பாடுகள் ஏற்பட்டால் 14477 என்ற உதவி சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு கூறலாம்.
தமிழகப் பள்ளிகளில் தமிழ் மொழிக்கே என்றும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆங்கில மொழியின் மீது பெற்றோர் கொண்டிருக்கும் மோகம், தேவைப்பாடுகள் காரணமாக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,000 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதற்காக சமூக நலத்துறையுடன் இணைந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணிகள் முடிவடைந்ததும் முறையான அறிவிப்புகள் வெளியாகும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
இந்த விழாவில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்புராயன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, தன்னார்வ தொண்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT