தமிழ்நாடு

கடலூர் வீராணம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

DIN


சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய இரு வட்டங்களும் காவிரி டெல்டாவின் கடைமடை பாசனப் பகுதிகளாகும். காட்டுமன்னார்கோவில் அருகே 15 சதுர மைல் பரப்பில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரியில் கடல் மட்டத்திலிருந்து 47.50 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க முடியும். ஏரியின் மொத்தக் கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரி நீர் மூலம் 49,440 ஏக்கர் விளை நிலங்களில் நேரடியாகவும், 20,500 ஏக்கர் விளைநிலங்களில் தொடர் பாசனம் மூலமும் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கூறிய 2 வட்டங்களிலும் பெரும்பாலான விவசாயிகள் மேட்டூர் அணை நீரை நம்பியே சாகுபடி செய்கின்றனர். 

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசன விவசாயிகள் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான 4 மாதங்களில் ஒருபோகம் மட்டுமே சாகுபடி செய்து வருகிறார்கள். வடகிழக்குப் பருவமழை முழுமையாகப் பெய்தால் மட்டுமே சாகுபடிப் பணிகளை நிறைவாகச் செய்ய முடியும். பருவமழை குறைந்தால் விளைச்சலும் பாதிக்கப்படும்.

சென்னை பெருநகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய வீராணம் ஏரியின் கொள்ளளவை உயர்த்தி, அதன்மூலம் கிடைக்கும் உபரி நீரைக் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்ட புதிய வீராணம் திட்டப் பணிகள் நிறைவடைந்து, 2004-ஆம் ஆண்டு முதல் நாள்தோறும் சென்னைக்கு விநாடிக்கு 77 கன அடி வீதம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. 2004 முதல் 2010-ஆம் ஆண்டு வரை வீராணம் ஏரியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையில் நான்கில் ஒருபகுதியை நிறைவு செய்தது. அதன்பிறகு, சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்கு வீராணம் ஏரியிலிருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் எடுக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதனால், சாகுபடிப் பணிக்கு முழுமையாகத் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாக கோடைகாலத் தேவைக்கு வாலாஜா ஏரியிலிருந்து பரவனாறு வழியாக பாசனத்துக்கு செல்லும் தண்ணீரை மறித்து, தரைமட்ட நீர்சேமிப்புத் தொட்டி அமைத்து சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமாகவும் வீராணம் ஏரிக்கு, கடந்த 10 நாட்களாக கீழணையில் இருந்து நீர்வரத்தை அதிகப்படுத்தி வீராணம் ஏரியில் தண்ணீர் அளவு உயர்த்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வீராணம் ஏரியின் முழுகொள்ளளவான 47 புள்ளி 50 அடியை எட்டி உள்ளது. கீழணையில் இருந்து, வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 483 கனஅடியாக உள்ளது.  

இதையடுத்து சென்னையின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 74 கனஅடியும், பாசனத்திற்காக 414 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT