தமிழ்நாடு

தமிழகத்தில் அமைதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு

தினமணி

தமிழகத்தில் அமைதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை என்ற நிலைதான் நிலவுகிறது என்று திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில், துரைமுருகன் பங்கேற்றுப் பேசியதாவது: பேருந்துக் கட்டண உயர்வால் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அதிமுக அரசு தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் ரூ. 400 கோடி அளவுக்கு பேரம் பேசி இந்தப் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி விட்டது. ரௌடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நகை பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அமைதி, வளம், வளர்ச்சி என்கின்றனர். ஆனால், தமிழகத்தில் அமைதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லாத நிலைதான் நிலவுகிறது.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு முன் எதிர்க்கட்சிகளிடம் பேசியிருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவையை அவர்கள் சொந்த வீடு போல் நினைத்து ஜெயலலிதாவின் படத்தைத் திறந்துள்ளனர். 7 ஆண்டுகளாக ஆட்சியிலுள்ள அவர்களால் எந்தத் திட்டத்தையும் சரியாக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஏரிகளை தூர்வாராமலேயே ரூ. 800 கோடி ஊழல் நடைபெற்றது. நாட்டில் எதுவேண்டுமானாலும் கெட்டுவிடலாம். ஆனால், கல்வி கெட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் லஞ்சம் வாங்கி கைதாகியிருப்பது வேதனையான சம்பவமாகும். 

தம்பிதுரை எம்.பி. திமுக அழிந்துவிடும் என கூறியுள்ளார். அண்ணா விதைத்த திமுகவை யாராலும் அழிக்க முடியாது. திமுக தலைவர் கருணாநிதி ஓய்வெடுத்தாலும், அவரது வழியில் செயல்தலைவர் ஸ்டாலின் திமுகவை கட்டி காப்பாற்றி வருகிறார் என்றார் அவர்.

திமுக மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை வகித்தார். கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான ஆர்.காந்தி, வேலூர் மாநகரச் செயலரும், எம்எல்ஏவுமான ப.கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் முகமதுசகி, எம்எல்ஏக்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அ.நல்லதம்பி, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் டீக்கா ராமன், மதிமுக மாவட்டச் செயலர் கண்ணதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT