தமிழ்நாடு

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது?: உயர் நீதிமன்றம் கேள்வி

DIN

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ளதைப் போல், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மருத்துவப் படிப்பை முடித்த ஐஸ்வர்யா என்பவர் , கடந்த 2015 -ஆம் ஆண்டு சிவகாசியில் உள்ள சித்தூர்ராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி மருத்துவராக பணியில் சேர்ந்தார். ஜூலை மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 6 மாதம் அவர் மகப்பேறு கால விடுப்பு எடுத்துள்ளார். இதனிடையே, மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்கான இரண்டாண்டு காலப் பயிற்சி மருத்துவர் பணியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் நிறைவு செய்தார். இதையடுத்து, அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பில் சேர இடம் கிடைத்தது. ஆனால், 'இரண்டாண்டு கால பயிற்சி மருத்துவர் பணியை ஐஸ்வர்யா நிறைவு செய்யவில்லை' எனக் கூறி, பணியிலிருந்து அவரை விடுவிக்க, சிவகாசி சுகாதார சேவை துணை இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, அவருடைய மருத்துவ மேற்படிப்புச் சேர்க்கையை ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஐஸ்வர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஐஸ்வர்யா பயிற்சி மருத்துவர் என்பதால் அவரது பேறுகால விடுமுறையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மருத்துவ மேற்படிப்புக்கு ஐஸ்வர்யா ஏற்கனவே தகுதி பெற்றிருப்பதால், அடுத்த ஆண்டு அவரை அந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்காமல் சேர்க்க உத்தரவிட்டார்.

ஒரு சட்டத்தை இயற்றுவது மட்டும் அரசின் கடமை அல்ல, யாருக்காக சட்டம் இயற்றப்பட்டதோ அவர்களுக்கு பலன்களைக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். 

மேலும், இந்தியாவில் தாய்ப்பால் கொடுப்பது அதிகரித்திருந்தாலும், பேறு காலத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரசவம் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் மறுபிறப்புதான் எனக் கூறி நீதிபதி கிருபாகரன் வழக்கை முடித்த வைத்தார்.

தாய்ப்பாலை ஏன் கட்டாயமாக்கக் கூடாது?: இருப்பினும், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து, மத்திய அரசு வழங்கும் கால அளவைப் போல், பேறுகால விடுப்பை அடுத்த ஓராண்டுக்குள் உயர்த்த மாநில அரசுகளுக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை தாய்பால் குடிப்பதைக் குழந்தைகளின் அடிப்படை உரிமையென ஏன் அறிவிக்கக்கூடாது? ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளதைப் போல், தாய்ப்பால் கொடுப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் மத்திய அரசு ஏன் சட்டம் இயற்றக்கூடாது? பேறுகால விடுப்பை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுகள் ஏன் விதிகளை உருவாக்கக்கூடாது? என்பன உள்ளிட்ட தாய்ப்பாலின் அவசியம் குறித்த 15 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT