தமிழ்நாடு

பசுமை வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து நடைப்பயணம்

DIN

சேலம் -சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருவண்ணாமலையிலிருந்து சேலம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர், கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளது. சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்கிறவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் கண்மூடித்தனமாக அடக்குமுறை ஏவப்படுகிறது. இத்தகைய சூழலில், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து செப்டம்பர் மாதம், மக்கள் உரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு சென்னையில் நடைபெறும்.
நடைப் பயணம்: சென்னை - சேலத்துக்கு ஏற்கெனவே 3 வழித் தடங்கள் உள்ள நிலையில், இப்போது புதிதாக 8 வழிச் சாலை திட்டம் தேவை இல்லாதது. இந்தத் திட்டத்துக்காக ஏராளமான விவசாயிகளின் விளை நிலங்களை கையகப்படுத்தப்படுகின்றன. எனவே, இந்தத் திட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, மேற்கு மாவட்டங்களில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி போராட்டங்கள் நடத்தப்படும். அதன் ஒரு பகுதியாக, எனது தலைமையில் என் நிலம், என் உரிமை' என்ற முழக்கத்தோடு திருவண்ணாமலையிலிருந்து சேலம் நோக்கி ஆகஸ்ட் 1 - ஆம் தேதி முதல் நடைப்பயணம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
உரிய விசாரணை தேவை: தமிழகத்தில் 7 ஆயிரம் சிலைகள் கடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏற்கெனவே விசாரணை அதிகாரியாக உள்ள பொன் மாணிக்கவேல் தலைமையில், அவர் விரும்புகிற பொருத்தமான அதிகாரிகளை வைத்தே விசாரணை நடத்த வேண்டும்.
நீட் தேர்வு: தமிழில் நீட் தேர்வெழுதிய 24ஆயிரம் மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கூடுதல் மதிப்பெண் வழங்குவதன் மூலம் சேர்க்கைக்கு மாணவர்கள் வரும்போது, ஏற்கெனவே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இடையூறு இன்றி, புதிய இடங்களை உருவாக்கி சேர்க்கையை நடத்த வேண்டும் என்றார் அவர். 
இச்சந்திப்பின்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT