தமிழ்நாடு

தமிழக அரசை விமர்சிப்பதை மத்தியில் இருப்பவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்: டி.ஜெயக்குமார் 

DIN

தமிழக அரசை விமர்சிப்பதை மத்தியில் இருப்பவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்; தங்களது தரப்பு கிளர்ந்து எழுந்தால் நிலமை மோசமாக இருக்கும் என மீன் வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
காமராஜரின் 116-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவருடைய சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் டி.ஜெயக்குமார், அதன் பின்னர் அளித்த பேட்டி:-
சத்துணவு முட்டைக் கொள்முதலில் ஊழல் என்ற விமர்சனத்தில் சிறிதளவும் உண்மை இல்லை. வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித் துறை சோதனை நடத்துகிறது. 
இதை வைத்துக்கொண்டு, முட்டைக் கொள்முதலில் ஊழல் என்று எவ்வாறு கூற முடியும்? இது தொடர்பாக அந்தத் துறையின் அமைச்சர் தெளிவான அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.
தமிழக அரசு மீது இது போன்ற குற்றச்சாட்டைக் கூறுவது மத்தியில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. எனவே, அவர்கள் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். தங்கள் தரப்பும் இதுபோல கிளர்ந்து எழுந்தால், விளைவு மிக மோசமாக இருக்கும். அரசியல் உள்நோக்கத்தோடு இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறினால், பதிலடி கொடுக்க அதிமுக அரசும் தயாராக உள்ளது.
தைரியமாக மீன் சாப்பிடலாம்...: மீன்களை பதப்படுத்த பார்மலின் பயன்படுத்தப்படுவதாக பிரச்னை எழுந்த உடனேயே, அனைத்துப் பகுதிகளிலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக மீன்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 
அதில், மீன்களைப் பதப்படுத்த பார்மலின் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனால், மீன்பிடித் தடைக் காலங்களில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் மீன்களில் பார்மலின் வேதிப் பொருள் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழக மீன்களில் அவ்வாறு இல்லை என்பது 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அது தேவையற்ற வதந்தி. மக்கள் தைரியமாக மீன்கள் சாப்பிடலாம்.
தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க தமிழக அரசு நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி, நல்ல தீர்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. எனவே, அவர்களின் நலனுக்காக உரிய நேரத்தில் உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும். 
இப்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, முடிவுகளை எடுத்துவரும்போது அதுதொடர்பான கருத்துக்களைக் கூறுவது சரியாக இருக்காது.
விசாரணை ஆணையம்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து, உண்மைகள் மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 
எந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்டதோ, அதை நோக்கித்தான் ஆணையம் சென்றுகொண்டிருக்கிறது. எனவே, ஆணையம் உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்கும் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT