லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி: ரூ. 4 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்
லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்ததால் குடியாத்தம் பகுதியில் நாளொன்றுக்கு ரூ. 1 கோடி வீதம், மொத்தம் ரூ. 4 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்
லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்ததால் குடியாத்தம் பகுதியில் நாளொன்றுக்கு ரூ. 1 கோடி வீதம், மொத்தம் ரூ. 4 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
குடியாத்தம் பகுதியில் 110-க்கும் மேற்பட்ட கையினால் செய்யப்படும் குடிசை தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 15 பகுதி இயந்திர உற்பத்தி தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் குடியாத்தம், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், ஏழாயிரம் பண்ணை, கோவில்பட்டி பகுதிகளில் தான் பெரும்பாலான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்திய தேவையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. புதுதில்லி, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் தான் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஏற்கெனவே, மூலப் பொருள்கள் விலையேற்றம், ஆள்பற்றாக்குறை போன்ற காரணங்களால் இத்தொழில் நசிந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 4 நாள்களாக லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட தீப்பெட்டி பண்டல்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் குடியாத்தம் பகுதியில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு வர வேண்டிய மூலப் பொருள்களான மரக்குச்சி, மெழுகு குச்சி, அட்டை போர்டுகள், பட்டைகள், மெழுகு, குளோரைட், சல்பர், வஜ்ஜிரம் உள்ளிட்டவை வரவில்லை. இதனால் தொழிற்சாலைகளில் மூலப் பொருள்கள் குறைந்த அளவே உள்ளன. அவை இன்னும் ஓரிரு நாள்களுக்கு தான் வரும் என்பதால், தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும். எனவே, மத்திய அரசு இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வி.ஜி. தனபால், செயலர் ஆர்.கே. மகாலிங்கம், பொருளாளர் வி. பிச்சாண்டி ஆகியோர் கூறியதாவது: லாரிகள் வேலை நிறுத்தத்தால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் காரணமாக, பொருளாதாரம் முடங்கியுள்ளது. தொழிலாளர்களுக்கு கூலி வழங்க பணம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
மேலும், மூலப்பொருள்கள் காலியாகி விட்டதால் தொழிற்சாலைகளை மூடும் நிலை உருவாகும். இதனால் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாக நேரிடும். மத்திய அரசு லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.