முகப்பு
தமிழ்நாடு

ஏர்செல் சேவையை நீட்டிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்! 

தமிழகத்தில் ஏர்செல் சேவையை நீட்டிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 மார்ச் 2018, 12:32 pm IST
பகிர்:

சென்னை: தமிழகத்தில் ஏர்செல் சேவையை நீட்டிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. செல்லிடப்பேசி புழக்கத்துக்கு வந்த காலத்திலேயே ஏர்செல் நிறுவனம் தனது சேவையைத் தொடங்கியதால், அதற்கு வாடிக்கையாளர்கள் பெருமளவு குவியத் தொடங்கினர்.

நாளடைவில் செல்லிடப்பேசி இணைப்பு வழங்கும் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கின. வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளிக் குவித்தன. அதேசமயம், 'ஏர்செல்' நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் படிப்படியாக விலகி வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களை நாடத் தொடங்கினர். இதற்கு செல்லிடப்பேசி சிக்னல்கள் கிடைக்காததும் ஒரு காரணம் என வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

சிக்னல் இல்லாத காரணத்தால், ஏர்செல் இணைப்பை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் கடந்த இரண்டு வாரங்களாக கடும் அவதிக்கு உள்ளாகினர். அவர்கள் அனைவரும் ஏர்செல் நிறுவன சேவை மையங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சூழ்நிலை உருவானது.

ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல்கள் திடீரென தடைபட்டதற்கான காரணம் குறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 'ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் நிலுவை உள்ளது. இதனால் சிக்னல் விநியோகம் தடைபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9 ஆயிரம் டவர்களில் 6 ஆயிரத்து 500 டவர்களில் சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளது' என அப்பொழுது தெரிவித்தனர்.

ஏர்செல் நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாத காரணத்தால், வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தங்களுக்கு அதிகரிக்கும் கடன் நெருக்கடியின் காரணமாக தங்களை 'திவால்' என்று அறிவித்து விடுமாறு ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் மனு செய்தது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் ரூ.15,500 கோடிக்கும் அதிகமாக கடன் சுமை இருப்பதால் தங்களை 'திவால்' என்று அறிவித்து விடுமாறு, ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருந்தது.

அதே நேரம் நடப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்குள் மாற்று ஏற்பாடுகளை ஏர்செல் நிறுவனம் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஏர்செல் சேவையை நீட்டிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று திங்களன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் தமிழகத்தில் நடப்பில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவரும், முழுமையாக வேறு நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ளும் ‘எம்.என்.பி’  வசதியைப் பெறும் வரை ஏர்செல் சேவையை நீட்டிக்க அந்நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி ஏர்செல் நிறுவனம் மற்றும் தேசிய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் ஏர்செல் நிறுவனத்தின் சேவை நிறுத்தப்படும் என்று தேசிய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments