தலைமைச் செயலகத்தின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்புக் கேமரா
தலைமைச் செயலகத்தின் அனைத்து உணவுக் கூடங்கள், உணவகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தின் அனைத்து உணவுக் கூடங்கள், உணவகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளியில் இருந்து வரும் நபர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமைச் செயலகத்தின் பிரதான மூன்று மாடிக் கட்டடம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடிக் கட்டடங்களின் நுழைவு வாயில்களில் ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால், தலைமைச் செயலக வளாகத்தில் செயல்படும் உணவுக் கூடங்கள், உணவகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்படாமல் இருந்தது.
பாதுகாப்புக் காரணம்: தலைமைச் செயலக கட்டடத்துக்குள் நுழையும் நபர்களைக் கண்காணிக்க கேமராக்கள் இருந்தாலும், வளாகங்களில் அங்குமிங்கும் செல்லும் நபர்களைக் கண்காணிக்கவும், அங்குள்ள கடைகளுக்குள் புகும் நபர்கள் யார் யார் என்பதை அறியவும் கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்களின் உட்புறமும், நுழைவு வாயில் பகுதிகளிலும் சுமார் 5 முதல் 6 கண்காணிப்புக் கேமராக்கள் வரை பொருத்தப்பட்டுள்ளன. கடைகளைக் கடந்து செல்வது, வளாகங்களில் அலைந்து திரியும் சந்தேகத்துக்கு உரிய நபர்களைக் கண்டறியவும் கேமராக்கள் பொருத்துவதன் முக்கிய நோக்கமென தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.