தமிழ்நாடு

பிரதமர் அலுவலகத்துக்கு ரகுராம் ராஜன் அளித்த மோசடி நபர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் - திருமாவளவன்

DIN

அதிக மதிப்பில் மோசடி செய்த நபர்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகத்துக்கு அளித்த பட்டியலை வெளியிட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

ரகுராம் ராஜனிடம் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டு நிலைக்குழு விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு ரகுராம் ராஜன் அளித்துள்ள பதிலில்:

"ரிசர்வ் வங்கி கவர்னராக நான் இருந்தபோது, நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணை அமைப்புகளுக்கு விரைவில் அறிக்கை அளிக்க ஏதுவாக ரிசர்வ் வங்கியால் மோசடி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும், அதிக மதிப்பில் மோசடி செய்த நபர்கள் குறித்த பட்டியலையும் பிரதமர் அலுவலகத்துக்கு நான் அனுப்பி வைத்தேன். அதில் மோசடி செய்தோரில் 1 அல்லது 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எனக்கு தெரியாது" என்றார்.  

ரகுராம் ராஜன் வலியுறுத்தியும் பிரதமர் அலுவலகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா என்று சர்ச்சை எழுந்தது. 

இதுதொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மோசடி கடனாளிகளின் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களை நாட்டைவிட்டு தப்பிக்க அனுமதித்த பிரதமர் மோடி அவர்கள் இதற்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற மதிப்பீடுக் குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வாராக் கடன்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சமர்பித்துள்ளார். அதில் வாராகடன்கள் உருவாவதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். மோசடியாக உள்நோக்கத்துடன் கடன் பெறுவது முக்கியமான காரணமாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘மோசடி கடனாளிகளின் பட்டியலைப் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி ஒன்றிரண்டு பேர் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் போது  வலியுறுத்தினேன். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இது அவசரமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகும்’ என்று அவர் கூறியுள்ளார்.

ரகுராம் ராஜன் அளித்த பட்டியலில் நிரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோரின் பெயர் உள்ளதாகவும் அவர்களை நாட்டைவிட்டு தப்பிச் செல்ல அனுமதித்தது எப்படி என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

விவசாயிகளும், மாணவர்களும் வாங்குகிற சில ஆயிரம் ரூபாய் கடன்களுக்காக அவர்களை அவமானப்படுத்தி அடியாட்களை வைத்து மிரட்டி வங்கிகள் தரும் நெருக்கடியால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மோசடி செய்யும் கார்ப்ரேட்டுகளுக்கு  பாதுகாப்பளித்து அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மோடி அரசு உதவுகிறது.
 
ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகத்துக்கு அளித்த மோசடி கடனாளிகளின் பட்டியலை உடனே பகிரங்கமாக வெளியிட வேண்டும். இத்தனை காலமாக அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் மோசடி பேர்வழிகள் தப்பிச் செல்ல உதவியாக இருந்ததற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT