தமிழ்நாடு

முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

DIN


தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அணையின் மேல்மட்ட மதகுகளை இயக்கி, டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்டார்.  காவிரி அன்னையைப் போற்றும் வகையில், ஆற்றில் மலர்களையும் அவர் தூவி வணங்கினார். அணையில் இருந்து 86-ஆவது ஆண்டாக,  டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 2020 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி வரை அணை திறக்கப்படும். முதல்கட்டமாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.  
நிகழ்ச்சியை அடுத்து,  முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியது:  மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் மேற்கு மற்றும் கிழக்குக் கரைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் கரையோர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  எனவே, படிப்படியாக தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டு 10 ஆயிரம் கன அடி அளவுக்கு திறந்து விடப்படும்.

தவறான கருத்தைப் பரப்பும் மு.க.ஸ்டாலின்: நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் யாரும் வந்து சந்திக்கவில்லை என்ற தவறான கருத்தை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பலத்த மழை பொழிந்தவுடனே வருவாய்த் துறை அமைச்சரை அனுப்பி,  பாதிக்கப்பட்ட  மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அரசு உதவி செய்யும்.  உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக அரசு அறிவித்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் தான் விளம்பரம் தேடவில்லை என்று கூறியிருக்கிறார்.  நாங்களும் அதைத்தான் கூறுகிறோம்.  பின்னர் எதற்காக அமைச்சர்கள் சென்று பார்க்கவில்லை என்ற தவறான கருத்தைத் தெரிவித்துள்ளார்? 
 தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீலகிரி மாவட்டத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு சீர்செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யும் நிலையில்,  புதன்கிழமை உயர் அலுவலர்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. 

முதலீட்டை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம்: எனது வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும். அயல்நாட்டில் வசிக்கும் தொழிலதிபர்களை அழைத்துப் பேசி அதிக முதலீட்டை ஈர்ப்பதற்காகவே இப்பயணத்தை மேற்கொள்கிறேன். அதேபோல,  மின்சாரத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், மிகப் பெரிய கால்நடைப் பூங்காவையும் அமைக்க உள்ளோம்.  அதில் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு அங்குள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்துக்கும் சென்று பார்வையிட உள்ளேன். மேலும்,  சுகாதாரத் துறையில் நவீன முறையில் சிகிச்சை மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட இருக்கிறோம்.   

சுயநலமிக்கவர் ப.சிதம்பரம்: மத்திய அமைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம் தமிழகத்துக்காக என்ன திட்டம் கொண்டு வந்துள்ளார்? அவரால் என்ன திட்டம் கொண்டு வரப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது? எத்தனை ஆண்டு காலம் நிதியமைச்சராக இருந்துள்ளார்,  தேவையான நிதியை வழங்கினாரா? தொழிற்சாலைகள் அமைத்தாரா?  இல்லை,  புதிய திட்டத்தைத் தான் கொண்டு வந்தாரா? காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்னைகளைத்தான் தீர்த்தாரா? எந்தப் பிரச்னையைத் தான் அவர் தீர்த்துள்ளார்? அவரது சுயநலம் மட்டுமே அவருக்கு முக்கியம்.  நாட்டு நலன் கிடையாது. அவரது பேச்சைப் பொருள்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.  மக்கள் அவரை ஏற்கெனவே நிராகரித்து விட்டனர் என்றார் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT