முகப்பு
தமிழ்நாடு

மாநகராட்சிகளாகின்றன ஒசூர், நாகர்கோவில்: பேரவையில் சட்ட மசோதா தாக்கல்

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகியன மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.

Updated On : 14 பிப்ரவரி 2019, 4:22 am IST
பகிர்:


தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகியன மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான சட்ட மசோதாக்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப் பேரவையில் புதன்கிழமை தனித்தனியாக தாக்கல் செய்தார்.
இதுகுறித்து மசோதாக்களில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடைபெற்றது. 
இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, மறுவரையறை ஆணையத்தால் செய்யப்படும் எல்லை வரையறைப் பணிகள் முடிவடைந்த பிறகு, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக அரசானது தேவைப்படும் மாற்றமைவுகளுடன் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தின் வரைமுறைகளைத் தழுவி ஒரு சிறப்புச் சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின் வாயிலாக நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
ஒசூர் மாநகராட்சி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  நடைபெற்ற எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர்
பழனிசாமி, மக்கள் தொகை அதிகரித்தல், ஆண்டு வருமானத்தில் முன்னேற்றம், ஒசூர் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் ஒசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
சிறப்பு-தேர்வு நிலை: தமிழகத்தில் மொத்தம் 152 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப தேர்வு நிலை, சிறப்பு நிலை என்ற அளவில் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாகர்கோவில் நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சியாகவும், ஒசூர் நகராட்சி, தேர்வு நிலை நகராட்சியாகவும் உள்ளன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒசூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 821 ஆக உள்ளது.
 59 ஆயிரத்து 351 ஆண்களும், 57 ஆயிரத்து 470 பெண்களும் உள்ளனர். எழுத்தறிவு பெற்றோரின் சதவீதம் 87.40 சதவீதமாக உள்ளது.
கல்வி அறிவு அதிகமுள்ள நாகர்கோவில்: நாகர்கோவில்  நகராட்சியில் மொத்த மக்கள் தொகையின் அளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 849 ஆக உள்ளது. அதில், ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர். பெண்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 911 பேரும், ஆண்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 938 பேரும் உள்ளனர். 
இதில் படித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 361 உள்ளது. எழுத்தறிவு பெற்றோரின் சதவீதம் 94.99 சதவீதமாக உள்ளது. ஆண்கள் 96.63 சதவீதம் பேரும், பெண்களில் 93.43 சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

மாநகராட்சிகள் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
தமிழகத்தில் மிகவும் பாரம்பரியமான சென்னை மாநகராட்சி உள்பட மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட புதிய சட்ட மசோதாவின்படி, மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர உள்ளது. சென்னை (200 வார்டுகள்), கோயம்புத்தூர் (100 வார்டுகள்), மதுரை (100 வார்டுகள்), திருச்சி (65 வார்டுகள்), சேலம் (60 வார்டுகள்), திருநெல்வேலி (55 வார்டுகள்), தூத்துக்குடி (60 வார்டுகள்), திருப்பூர் (60 வார்டுகள்), ஈரோடு (60 வார்டுகள்), வேலூர் 60 வார்டுகள்), தஞ்சாவூர் (62 வார்டுகள்), திண்டுக்கல் (51 வார்டுகள்) ஆகிய மாநகராட்சிகள் ஏற்கெனவே உள்ளன. இந்த மாநகராட்சிகளின் பட்டியலில் ஒசூரும், நாகர்கோவிலும் இணைய உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.