ஆதிச்சநல்லூர் அகழாய்வு விவகாரம்: தொல்லியல் துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பொருள்களை புளோரிடா மற்றும் தில்லிக்கு பரிசோதனைக்கு அனுப்பியது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பொருள்களை புளோரிடா மற்றும் தில்லிக்கு பரிசோதனைக்கு அனுப்பியது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக் கோரியும் காமராஜ் தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையில், தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா எனவும், மத்திய தொல்லியல் துறை தமிழர்களின் பண்பாட்டை மறைக்க நினைக்கிறதா? எனவும் நீதிபதிகள் கேள்விகள் எழுப்பியிருந்தனர்.
மேலும், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பொருள்களை புளோரிடா மற்றும் தில்லிக்கு கார்பன் சோதனைக்கு அனுப்பவேண்டும் எனவும் தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
தொடர்ந்து, தமிழகத்தில் எத்தனை இடங்களில் தொல்லியல் அகழ்வாய்வு நடைபெறுகிறது? தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகள் குறித்து எத்தனை அறிக்கைகள் தாக்கல் செய்யபட்டுள்ளன? தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டவற்றில் கார்பன் சோதனைக்கு எத்தனை பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன?
இந்தியாவில் அகழ்வாய்வு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்குகின்றன? பட்ஜெட்டில் மாநில வாரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கிய நிதி எவ்வளவு? மத்திய, மாநில தொல்லியல் துறையில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளன? என்பன போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல்துறை அதிகாரிகள் சத்தியபாமா, சத்தியமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யப்பட்ட பொருள்கள் தில்லி மற்றும் புளோரிடாவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் முடிவுகள் தெரியவரும் என பதிலளித்தனர்.
மேலும், தொல்லியல் துறையில் மொத்தமுள்ள 35 பணியிடங்களில் 25 இடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, உத்தரவிட்டனர்.