நீதிமன்ற அவமதிப்பு: வேதாரண்யம் வட்டாட்சியர் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வேதாரண்யம் வட்டாட்சியர் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வேதாரண்யம் வட்டாட்சியர் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் கடின்வயல் பஞ்சாயத்து தலைவராக இருந்த டி.மலர்விழி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடின்வயல் பஞ்சாயத்துக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை குஜராத் ஹெவி கெமிக்கல் நிறுவனம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது. இந்த நிலத்தில் அந்த நிறுவனம் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் உப்பளம் நடத்தி வருகிறது. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக கடின்வயல் பஞ்சாயத்துக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. புறம்போக்கு நிலம் பயன்படுத்துவோர் வரி கட்டண விதிகளின்படி, புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவோரிடம் வரி வசூலிக்கலாம். இந்த விதிகளின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் 2003-ஆம் ஆண்டு முதல் வரி வசூலிக்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசுக்கு அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வரியை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பஞ்சாயத்து நிலத்தை பயன்படுத்திய குஜராத் ஹெவி கெமிக்கல் நிறுவனத்துக்கு விதிக்க வேண்டிய வரியைக் கணக்கிட்டு அதுதொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி மாவட்ட ஆட்சியர் வரியை வசூலிக்க வேண்டும் என கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அதிகாரிகள் இதுவரை அமல்படுத்தவில்லை.எனவே, உத்தரவை அமல்படுத்தாத நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், வேதாரண்யம் வட்டாட்சியர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.முருகபாரதி, இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு முறை அறிக்கை தாக்கல் செய்துள்ள வேதாரண்யம் வட்டாட்சியர், நிறுவனம் செலுத்த வேண்டிய வரியை சரியாக மதிப்பிடாமல் குறைத்து மதிப்பிட்டுள்ளதாக வாதிட்டார்.இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வேதாரண்யம் வட்டாட்சியர் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.