தமிழ்நாடு

தமிழிசையின் சிறப்புகளை உலகெங்கும் பரப்ப நடவடிக்கை: தேசிய கருத்தரங்கில் வலியுறுத்தல்

DIN


கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியுள்ள தமிழிசையை உலகெங்கும் கொண்டு செல்ல நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் வலியுறுத்தினர். 
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் எனும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் நந்தனம் அரசு கலை கல்லூரி முன்னாள் முதல்வர் அமுதா பாண்டியன் பேசியது:  சாதியப் பின்னடைவுகளாலும் பொருளாதாரப் பின்னடைவுகளாலும் இந்தியாவிலிருந்த பாணர்கள் தங்கள் இசையுடன் உலகின் பல பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். சுமார்  2,500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த  யாழ், மெசபத்தோமியா கல்லறையில் கண்டெடுக்கப்பட்டது. தென் கிழக்காசிய  இசைக்களுக்கான இலக்கணம் ஏறத்தாழ ஒன்றாகத்தான் உள்ளது. இவற்றுக்கெல்லாம் தாயாக தமிழிசை விளங்குகிறது என்றார்.  
பேராசிரியர் இறையரசன் பேசுகையில், ராஜராஜ சோழன் வென்ற கிழக்காசிய நாடுகள் முழுவதிலும் தமிழரின் இசை, சிற்பங்கள் , ஓவியங்கள் காணப்படுகின்றன. கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கண்ணகி, மணிமேகலை வழிபாடு காணப்படுகின்றது. தாய்லாந்தின் அரசு விழாக்களில் தேவாரம் பண்ணிசை ஓதப்படுகிறது என்றார்.
மியான்மார் நாட்டைச் சேர்ந்த செவ்வந்தி கண்ணன் பேசுகையில், மியான்மாரில் சுமார் எட்டு லட்சம் தமிழர்கள் உள்ளனர்.  தமிழிசை அங்கு கோவில்களின் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
இருப்பினும் தமிழிசை என்றாலே சினிமா இசையைத் தான் கேட்டு வருகிறோம். தமிழிசை எங்கள் மக்களுக்கு இன்னும் அவ்வளவாக அறிமுகம் இல்லை. மியான்மாரில் தமிழிசையினை வளர்த்தெடுக்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் தமிழிசை அறிஞர்களும் உதவ வேண்டும் என்றார். 
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டு தமிழர் புலத்தின் பேராசிரியருமான கு. சிதம்பரம் பேசுகையில், பல்வேறு கால கட்டங்களில் தமிழ் மொழி எவ்வாறு பிற மொழிகளின் தாக்கத்திற்கு ஆட்பட்டதோ அதேபோல தமிழிசையும் பிறமொழிகளின் தாக்கத்திற்கு ஆட்பட்டுள்ளது. இந்நிலையிலிருந்து தமிழிசையினை மீட்டுருவாக்கம் செய்யவும் தமிழிசையின் மேன்மையினை உலகெங்கும் பரப்பவும் வழிவகை செய்யப்படும் என்றார்.
முன்னதாக  தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் பேசுகையில்,  பண்டைய தமிழர்கள் உலகம் முழுவதும் பல துறைகளில் தமது ஆளுமையினை செலுத்தியுள்ளனர். அதில் இசைத்துறையும் ஒன்றாகும். தமிழ் மொழியைப் போன்றே தமிழிசையும் உலகின் மூத்த இசையாக உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT