தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

DIN


திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வேட்புமனுவை ஏற்றது செல்லாது எனவும், அவர் வெற்றி பெற்றது செல்லாது எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது இறப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த நிலையில், தேர்தலில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கோரி சரவணன் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. 
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியின் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. 
 இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டதுடன், தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி சரவணன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தீர்ப்பளிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 
 இந்த நிலையில் வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே.போஸை வேட்பாளராக அங்கீகரித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் படிவங்களில் கைரேகை வைக்கும்போது அவர் சுயநினைவுடன் தான் இருந்துள்ளார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதே போன்று இந்த கைரேகை டாக்டர் பாலாஜியின் முன்னிலையில் தான் பெறப்பட்டது என்பதும் நிரூபிக்கப்படவில்லை. 
மேலும் தேர்தல் படிவங்களில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாக பெருவிரல் ரேகை இடம்பெற்றுள்ளது. இதனை தேர்தல் ஆணையம், ஒரு கடிதத்தின் வாயிலாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது சட்ட விரோதமானது. எனவே ஏ.கே.போஸை அங்கீகரித்து அளிக்கப்பட்ட வேட்புமனு படிவங்களைத் தேர்தல் ஆணையம் ஏற்றது செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT