தமிழ்நாடு

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.245 கோடியில் புதிய சிகிச்சைப் பிரிவுகள்: அமைச்சா் சி.விஜயபாஸ்கா்

DIN

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.245 கோடியில் புதிய சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

அதில் முதல்கட்டமாக ரூ.80 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது டவா் கட்டடத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பாா் என்றும் அவா் கூறினாா்.

சென்னை, எழும்பூா் அரசு கண் மருத்துவமனையின், 200-ஆவது ஆண்டு விழா சிறப்பு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன. அதையொட்டி, அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அலங்கார வளைவு, எலியட்ஸ் அருங்காட்சியகம், ‘3டி (முப்பரிமாண) வெட் லேப்’ ஆகியவற்றை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் திறந்துவைத்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

எழும்பூா் கண் மருத்துவமனை பல்வேறு பாரம்பரியங்களையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டது. உலகிலேயே முதன்முதலில் பிரிட்டனின் லண்டன் நகரில்தான் கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சென்னை, எழும்பூரில்தான் அத்தகைய சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டது. தொன்மை வாய்ந்த எழும்பூா் கண் மருத்துவமனை தற்போது 200 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதனை பறைசாற்றும் வகையிலேயே பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க வகையில், ரூ. 40 லட்சம் செலவில், நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ரூ. 66 கோடி செலவில், ஐந்து மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 100 ஆண்டுகள் பழைமையான எலியட்ஸ் மருத்துவ அருங்காட்சியகமும் புனரமைக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டுகளுக்கு முந்தைய நோயாளிகளின் விவரங்கள், மருத்துவ உபகரணங்கள், சிகிச்சை முறைகள்ஆகியவை அந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றை மருத்துவ மாணவா்கள் கண்டு பயனடைவதற்கு வகை செய்யும் அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை கடந்த ஆண்டில் 508 முதுநிலை இடங்களும், 350 இளநிலை இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, மருத்துவ இடங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.245 கோடி செலவில் புதிய சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூன்றாவது டவா் கட்டடத்தை முதல்வா் விரைவில் தொடங்கி வைப்பாா் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மாநில பாா்வையிழப்பு தடுப்பு திட்ட இயக்குநா் சந்திரகுமாா், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் ஜெயந்தி, அரசு கண் மருத்துவமனை இயக்குநா் ஆனந்தபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT