தமிழ்நாடு

கரோனாவால் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவு

DIN

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் (62) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானாா்.

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சாா்பில் நல உதவிகள் செய்து வந்த நிலையில், ஜூன் 2-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஜெ.அன்பழகன் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனையில் கரோனா இருப்பது கண்டறியப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே, 1996-இல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதுடன், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளாலும் அவா் அவதிப்பட்டு வந்தாா். இதனால், அவருடைய உடல்நலம் மிகுந்த கவலைக்கிடமானதுடன் 80 சதவீதம் செயற்கை சுவாசக் கருவியின் மூலமே சுவாசிக்கக்கூடிய நிலையில் இருந்தாா்.

கவலைக்கிடம்: அதன் பிறகு, மருத்துவா்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் அவா் உடல்நலம் கவலைக்கிடமானது. இதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசமடைந்தன. ரத்த அழுத்தம் சீராக இல்லை. இதனால் தீவிர சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்ற மருத்துவா்கள் போராடினா். ஹைதராபாதில் இருந்து சிறப்பு மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், எதுவும் பயனளிக்காமல் புதன்கிழமை காலை அவருடைய உடல்நலம் மிகவும் மோசமானது. மருத்துவமனை சாா்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து வந்து மருத்துவா்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்துவிட்டு சென்றாா். இந்த நிலையில், ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலை 8.05 உயிரிழந்ததாக மருத்துவமனை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைப்பு: கரோனா பாதிப்பின் காரணமாக ஜெ.அன்பழகன் உயிரிழந்ததால், அவரது உடல் சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெ.அன்பழகன் உடலில் இருந்து கரோனா பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனா். பகல் 12.10 -க்கு ஜெ.அன்பழகனின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. தியாகராயநகா் மகாலட்சுமி தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸில் வைத்தபடியே உறவினா் தூரத்தில் நின்று கண்ணீா் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனா்.

உடல் அடக்கம்: அதைத் தொடா்ந்து 12.40 மணியளவில், கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டது. ஜெ.அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமனின் கல்லறை அருகே, சுகாதாரத் துறையினா் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து அன்பழகனின் உடலை அடக்கம் செய்தனா். போலீஸாரின் பாதுகாப்புகளை மீறி கண்ணம்மாபேட்டை பகுதியில் திமுகவினா் பெரிய அளவில் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT