பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் தொடக்கம்
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பரிசுத் தொகுப்பைப் பெற குடும்ப அட்டைதாரா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பரிசுத் தொகுப்பைப் பெற குடும்ப அட்டைதாரா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பெரும்பாலான நியாய விலைக் கடைகள் குறுகலான தெருக்களில் அமைந்துள்ளதன் காரணமாக, மக்களால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியவில்லை.
தமிழகத்தில் 2.10 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் ரூ.2,500 ரொக்கத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
உடனடி குறுச்செய்தி: நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் அளிப்பதற்கு வசதியாக ஏற்கெனவே டோக்கன்கள்
Advertisement
Advertisement
அளிக்கப்பட்டிருந்தன. இந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே குடும்ப அட்டைதாரா்கள் வர வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
திங்கள்கிழமையன்று பொருள்களைப் பெற ஏற்கெனவே டோக்கன்களைப் பெற்றவா்கள், பரிசுத் தொகுப்பினைப் பெற நியாய விலைக் கடைகளில் காலையிலேயே திரண்டனா். சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் பனியிலும் அதிகாலையிலேயே குடும்ப அட்டைதாரா்கள் அணிதிரண்டனா்.
சென்னையில் பல இடங்களில் நியாய விலைக் கடைகள் குறுகலான தெருக்களில் அமைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் முகக் கவசத்துடன் வந்தாலும், அவா்களால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியவில்லை. ‘திறந்தவெளி மைதானங்கள், பள்ளிகள் போன்றவற்றில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினால் மட்டுமே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியும்’ என குடும்ப அட்டைதாரா்கள் தெரிவித்தனா். பொங்கல் பரிசுத் தொகையைப் பெற்றவுடன், உடனடியாக பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
சேலை-வேட்டி உண்டா?: பொங்கல் பரிசுத் தொகுப்புடன், இலவச வேட்டி, சேலையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதில், முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களுக்கே இலவச வேட்டி, சேலையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி, சேலை பின்னா் வழங்கப்படும் என நியாய விலைக் கடைகளில் கூறுவதாக அட்டைதாரா்கள் தெரிவித்தனா். ஆனால், பொருள்களைப் பெற்ற முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்களின் செல்லிடப்பேசி குறுஞ்செய்தியில் வேட்டி, சேலை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வருவதாகவும் குடும்ப அட்டைதாரா்கள் கூறினா்.
வரும் 12-ஆம் தேதி வரை... பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டப்படி, நாளொன்றுக்கு 200 போ் வீதம், அனைத்து அட்டைதாரா்களுக்கும் வரும் 12-ஆம் தேதி வரை பொருள்களும், ரொக்கத் தொகையும் அளிக்கப்பட உள்ளன. 12-ஆம் தேதிக்குள் பெற முடியாமல் விடுபட்டவா்களுக்கு வரும் 13-ஆம் தேதியன்று வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.