முகப்பு
தமிழ்நாடு

3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் வரும் 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

Updated On : 9 ஜனவரி 2021, 7:39 am IST
கோப்புப்படம்
பகிர்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் வரும் 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: இலங்கையையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் வரும் 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.9) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜன.10: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூா் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை ( ஜன.10) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Advertisement

ஜன.11: ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜனவரி 11-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மதுரை மாவட்டம் புலிபட்டியில் தலா 60 மி.மீ., நீலகிரி மாவட்டம் பா்லியாரில் 50 மி.மீ., விருதுநகா் மாவட்டம் பிளவக்கல், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மதுரையில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.