முகப்பு
தமிழ்நாடு

அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான தேர்வு அட்டவணையை பிப்.4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் நேரடியாகவோ, ஆன்லைன் வழியாகவோ அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான தேர்வு அட்டவணையை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Updated On : 11 ஜனவரி, 2021 at 12:48 PM
பகிர்:

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் நேரடியாகவோ, ஆன்லைன் வழியாகவோ அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான தேர்வு அட்டவணையை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு பதில்மனு தாக்கல் செய்தது. 

அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது என தெரிவித்திருந்தது. அரியர் தேர்வுகளை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பில் விதிமீறல்கள் எதுவும் இல்லை என உயர்கல்வித்துறை தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு நடத்தாமல், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

Advertisement

அரியர் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றதாக ஏற்கனவே தேர்வு முடிவுகள் வெளியிட்டிருந்தால், அந்த முடிவுகளை உடனடியாக திரும்ப பெற்று புதிய அறிவிப்பாணை வெளியிட்டு அரியர் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நேரடியாகவோ ஆன்லைன் மூலமாகவோ, பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், மாணவர்கள் நலன் கருதியே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் கரோனா சூழல் மாறியுள்ளதால் பல்கலைக்கழகங்கள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,அரியர் தேர்வு தொடர்பான தேர்வு அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.