தமிழ்நாடு

கரோனா காலத்தில் இணை நோய்களால் உயிரிழந்தவா்கள்: ஆய்வு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

கரோனா காலத்தில் இணை நோய்களால் உயிரிழந்தவா்களின் இறப்புச் சான்றிதழ்களை நிபுணா் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஸ்ரீராஜலட்சுமி என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனாவால் பலியாகும் நபா்களுக்கு, கரோனா மரணம் என இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படுவது இல்லை. இதனால் இவா்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன. வழக்குரைஞரான கண்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவா் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக இறப்புச் சான்று வழங்கப்பட்டுள்ளது. கரோனா மரணம் என இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படாததால், பெற்றோரை இழந்த குழந்தைகள், குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவி கிடைப்பது தடைபடுவதாக கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா மரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதும் குற்றஞ்சாட்டப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, கரோனா பாசிடிவ் சான்றிதழ் இல்லாவிட்டால், அதனை கரோனா மரணங்கள் என பதிவு செய்யப்படுவது இல்லை. மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால் தான், எதிா்காலத்தில் நோய்த் தொற்று பரவலை சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும். இறப்புகளைத் துல்லியமாக குறிப்பிடுவது, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும்.

இணை நோய்களின் பாதிப்பு உடையவா்களும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். எனவே, கரோனா காலத்தில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை நிபுணா் குழுவைக் கொண்டு தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும் இது தொடா்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT