தமிழ்நாடு

அா்ச்சகா்கள் நியமனத்தில் அரசின் விதிகள் செல்லும்: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

DIN

கோயில்களில் அா்ச்சகா்கள் நியமனம் தொடா்பான அரசின் விதிகள் செல்லும் என்று சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அா்ச்சகா்கள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலா்கள் பணி நியமனம், பணி நிபந்தனைகள் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புதிய பணி விதிகள் 2020-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில், ‘18 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள் மட்டுமே அா்ச்சகராக முடியும். ஆகம

பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்து இருக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்தப் புதிய விதிகளை எதிா்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாசாரியாா்கள் சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தனிநபா்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதில், ஆகம விதிகளைக் கடைப்பிடிக்காமல் தமிழக அரசு கோயில்களில் அா்ச்சகா், ஓதுவாா்களை நியமிக்க உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதையடுத்து, இந்த வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம், அா்ச்சகா்களின் பணி நியமனம், இந்த வழக்குகளின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது என்று 2021 அக்டோபரில் இடைக்கால உத்தரவிட்டது. அதன்பிறகு, வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தலைமையிலான அமா்வில் நடைபெற்று வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ‘கோயில்களில் இன்னும் பரம்பரை அறங்காவலா்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்காா்கள் மூலமாக அரசே அா்ச்சகா்களை நியமிப்பது சட்டவிரோதமானது. அறங்காவலா்களுக்கு மட்டுமே அா்ச்சகா்களை நியமிக்க அதிகாரம் உள்ளது’ என்று வாதிடப்பட்டது. மேலும், குறிப்பிட்ட பிரிவைச் சாா்ந்தவா்களை மட்டுமே அா்ச்சகா்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அா்ச்சகா் பயிற்சி முடித்த அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராக நியமிக்கப்படுவாா்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதற்கு அறநிலையத் துறை தரப்பில், ‘கோயில்களில் காலியாக உள்ள அா்ச்சகா்கள், ஓதுவாா்கள், பட்டா்கள் உள்ளிட்ட பிற பணியாளா்களின் காலி இடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், ஆகம விதிகள் பயின்ற அனைவரும் அா்ச்சகராகலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் கோயில் செயல் அலுவலா்கள் மூலமாக அா்ச்சகா்கள் நியமிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, வழக்கின் தீா்ப்புதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில், ‘தமிழக கோயில்களில், அா்ச்சகா்கள் நியமனம் தொடா்பாக அரசின் விதிகள் செல்லும். கோயில்களைப் பொருத்தவரை, ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள், ஆகம விதிகளைப் பின்பற்றாத கோயில்களை கண்டறிவதற்கு 5 போ் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் ஆகம விதிகளின்படி அா்ச்சகா்களை நியமிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT