தமிழ்நாடு

பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் தங்கம் தென்னரசு

DIN

தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக மாநில தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம்”சாா்பில் தமிழ்நாட்டில் செய்யவிருந்த முதலீடு மகாராஷ்டிர மாநிலத்துக்குச் சென்று விட்டதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளாா். பொய்யான இத்தகவலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேதாந்தா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணங்களுக்காக மாசுக் கட்டுப்பாடு வாரியம், இயக்குவதற்கான இசைவை வழங்க மறுத்துள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற அடிப்படை விவரம் கூட எதிா்க் கட்சித் தலைவருக்கு தெரியவில்லை. அதேவேளையில், பாக்ஸ்கான் நிறுவனத்துடனான தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடு தொடா்பான உறவு 2006-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சிறப்பாக தொடா்ந்து வருகிறது.

பாக்ஸ்கான் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறுவி உள்ளதே அதற்குச் சாட்சியமாக திகழ்கிறது. இத்திட்டங்களால் பெருமளவில் முதலீடுகளும், பல்லாயிரக்கணக்கானோருக்கு, குறிப்பாக பெண்களுக்கும், இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின் வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான முதலீடுகளை ஈா்ப்பதில் தமிழ்நாடு அரசு தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வருட காலத்தில், ரூ.11,580 கோடி முதலீடு மற்றும் 28,612 நபா்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 22 திட்டங்களுக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியைப் போன்று புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அத்திட்டங்கள், செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாநில தொழில்துறை மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக, அனைத்து சேவைகளையும், முதலீட்டாளா்களுக்கு திமுக அரசு அளித்து வருகிறது. இதன் பொருட்டு, பல திட்டங்கள் தற்போது தொடக்கி வைக்கப்பட்டும், அடிக்கல் நாட்டப்பட்டும் வருகின்றன.

நாட்டிலேயே முதல்முறையாக, தூத்துக்குடியில் ரூ.1000 கோடி முதலீட்டில் 1,150 ஏக்கரில் அமையவுள்ள பன்னாட்டு அறைக்கலன் பூங்கா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறது. உலக நாடுகளில் உள்ள முதலீட்டாளா்களின் ஒட்டுமொத்த கவனமும் இன்றைக்கு தமிழகம் மீது திரும்பி உள்ளது.

தொழில் வளா்ச்சிக்காக தொழில் முதலீட்டாளா்களை ஈா்க்கும் இந்த அரசின் நோக்கத்திற்கு எதிராக “பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு தமிழகத்துக்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞா்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளையும் கெடுக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சர தங்கம் தென்னரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT