அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் உத்தரவு
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு அளிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளிடையே பதவி உயர்வு மற்றும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், பணி ஓய்வுபெறும் நாளில் செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப் பலன்களை சிலர் பெறுவதாகவும் அரசிடம் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
எனவே, தகுதியுள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிரிக்க வேண்டும். செயற்கை காலிப் பணியிடங்களை ஏற்படுத்துதலை தவிர்க்க வேண்டும். மேலும், தற்காலிக பதவி உயர்வு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணியாளர்களின் இறப்பு, பணி ஓய்வு, நீண்ட கால விடுப்பு ஆகியவற்றால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி நிரப்புவதற்கு தடையேதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் அனைவரும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.