தமிழ்நாடு

சிறந்த செயல்பாடு: ராஜீவ் காந்தி மருத்துவமனை முதலிடம்

DIN

சிறந்த செயல்பாடுகள், சிகிச்சைகளை அளிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாநிலத்திலேயே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரம், செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக மாதந்தோறும் அதற்கான தரவரிசையை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பா் மாதத்துக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநா் சாந்திமலா் அண்மையில் வெளியிட்டாா்.

அதில், ராஜீவ் காந்தி மருத்துவமனை முதலிடத்தையும், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2-ஆம் இடத்தையும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடா்ந்து முதலிடத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது:

சென்னையின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 357 ஆண்டு பாரம்பரியமிக்கது. இங்கு தற்போது 42 துறைகள் உள்ளன. 977 மருத்துவா்கள், 1,552 செவிலியா்கள் பணியாற்றி வருகின்றனா். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் இருக்கின்றன. நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இங்குள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், படுக்கை வசதிகள், சிகிச்சை முறைகள், இறப்பு விகிதம், புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, அறுவை சிகிச்சைகள், மகப்பேறு, அவசர சிகிச்சைகள் என அனைத்து நிலையிலான செயல்பாடுகளையும் மருத்துவக் கல்வி இயக்ககம் மதிப்பீடு செய்கிறது.

அதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் மதிப்பீடு செய்து தரவரிசையாக வெளியிடும்போது ராஜீவ் காந்தி மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது. அடுத்து வரும் மாதங்களில் ஆராய்ச்சி, கல்வி நடவடிக்கைகளையும் மதிப்பீடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், சென்னை மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடிக்கும் என நம்புகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT