முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று பிற்பகல் தீர்ப்பு!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு இன்று கடைசி வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட் 2024, 11:19 am IST
உச்சநீதிமன்றம் - DIN
பகிர்:

தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிற்பகல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கின் விசாரணையை இன்று காலை பட்டியலிட்டிருந்த நிலையில், சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வேறு வழக்கில் ஆஜராவதால் பிற்பகலுக்கு ஒத்திவைக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், கடைசி வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பிஎம்எல்ஏ வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், நீண்ட காலம் சிறை வாசம் மற்றும் விசாரணை தாமதம் ஆகியவை காரணமாக பிஎம்எல்ஏ தொடா்புடைய வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை மேற்கோள் காட்டி, செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி வாதிட்டது.

மேலும், செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் விசாரணை தொடங்கப்படாததற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்த நிலையில், விசாரணையை தாமதிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.